Saturday, February 11, 2012

அம்மான்னா பயம்தான்!


ஒரு அரசு ஊழியரைப் பார்த்து அரசு ஊழியர்கள் என்றாலே கருணாநிதிக்கு செல்லப் பிள்ளைகள் போல. ஆனால் அவர் ஆட்சியில் தானே அதிகப் போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்டேன். உடனே அவர் “ சார் அம்மான்னா எல்லாருக்கும் பயம்தான்.. கொஞ்சம் முறைத்தாலும் உள்ளே பிடித்து போட்டு விடுவார். அப்புறம் அலைய வேண்டியதுதான். கருணாநிதி ஆட்சியில் போராட்டம் செய்தால் சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றுவார். அவ்வளவுதான். என்றார்.

நமது காம்ரேடுகள் தேர்தல் சமயங்களில் யாருடனாவது நிச்சயம் ஒரு கூட்டணி ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். கருணாநிதியுடன் கூட்டு என்றால் ரொம்ப கம்பீரமாகச் செல்வார்கள். அவர் முன்னர் உட்கார்ந்து பேசும் காட்சியே சாட்சி சொல்லும். அவரைச் சந்திப்பதற்கு முன்னும் சந்தித்த பின்னும் கொடுக்கும் பேட்டிகள் ரொம்ப சூடாக தன்மானம் தூக்கலாக இருக்கும். ஆனால் அம்மாவிடம் கூட்டணி என்று வைத்துக் கொள்ளுங்கள்... அவர்கள் கார்டனின் கதவுகளை நெருங்கும் சமயம் அலாதியாக இருக்கும். அவர்களையும் அறியாமல் சரீரத்தின் சர்வ நாடிகளும் தளர்ந்து விடும். சோபாவின் நுனியில்தான் அமர்வார்கள். பார்த்து வந்த பின்னர் பேட்டி என்பதே வடிவேல் நகைச்சுவை காட்சியில் வரும் “ துபாய் எங்க இருக்கு? என்ற கேள்விக்கு அவர் சொன்ன  பதில் போல இருக்கும்.

இந்த தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்களே! அவர்களுக்கு கருணாநிதியின் ஆட்சி என்றால் போராட்டம் நடத்துவது வெல்லக் கட்டி சாப்பிடுவது போல. தமிழ் உணர்வு பீறிட்டு எழும். காலையில் கைது பண்ணி கல்யாண மண்டபத்தில் தங்கச் செய்து மாலையில் விட்டு விடுவார்கள். மறுபடியும் அடுத்த போராட்டம். மத்திய அரசையும் இலங்கை அரசையும் சவாலுக்கு அழைப்பார்கள். அம்மா ஆட்சி என்றால் சர்வமும் ஒடுங்கி  விடும். நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள்.


பல வலைப் பதிவர்கள் கருணாநிதியின் ஆட்சியில் அவரை கிழி கிழியென்று கிழித்தார்கள். அவர் தமிழ் நாட்டின் சக்கரவர்த்தி போலவும், அவர் நினைத்து இருந்தால் இலங்கை மீது படையெடுத்து வென்று இருக்க முடியும் என்பது போலவும் எழுதினார்கள். மேலும் அம்மாவை வேறு தமிழ்த்தாய் ஆக சித்தரித்து மகிழ்ந்தார்கள். அந்த வலைப் பதிவர்கள் இப்போது என்ன ஆனார்கள்? ஏதாவது ஒன்று என்றால் மைக்கும் கையுமாக பேட்டிக்காக அலையும் டிவி,  பத்திரிக்கை நிருபர்கள் கண்ணில் சகோதரியார் தென்படவே இல்லை.

கூட்டணியில் இருந்தாலும் எதிர்க் கட்சிக்கான கடமையைச் செய்வோம் என்று கருணாநிதியை திட்டுவதையே அறிக்கைகளாக வைத்து இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற கதர் சட்டைக்காரர்கள் டெல்லிக்கு சென்று விட்டார்கள் போல இருக்கிறது. வைகோ களைத்துப் போய் ஓய்வில் இருக்கிறார். அடுத்த கிடுகிடு போராட்டம் நடத்த. மத்திய அரசை மட்டும் எதிர்க்க காரணம் இருந்தால் சொல்லுங்கள். அய்யா ராமதாஸ் முன்பெல்லாம் தைலாபுரத்தில் இருந்து கொண்டே தமிழ் நாட்டிற்காக வெறுங்கையில் மாதிரி பட்ஜெட் வாசிப்பார். அம்மாவின் ஆட்சியில் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். சின்ன பையன்கள் பம்பரத்தை கயிற்றால் சுற்றி நாக்கால் தொட்டு தரையில் வேகமாக விடுவார்கள். அதே போன்று விஜயகாந்திற்கு பம்பரம் சுத்தும் ஆக்‌ஷன் நன்றாக வரும்..  கருணாநிதியின் கவலையெல்லாம் இப்போதைக்கு கனிமொழிதான். மக்களைப் பெற்ற மகராசன்!  புத்திர சோகம் தசரத சக்கரவர்த்தியையே போட்டு உலுக்கியது. அம்மா ஆட்சி என்பது பிஜேபி காரகளுக்கு குஜராத்தில் மோடி இருப்பதைப் போல, இரண்டும் ஒன்றுதான்.  அம்மாவுக்கு இப்போது டெல்லி ஒன்றே லட்சியம். மற்றவைகள் அலட்சியம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒரு வழக்கு போட்டால் போதும். எல்லாம் சரியாகி விடும்.






Friday, January 6, 2012

தலித் – என்ற சொல் !



பண்டைய இந்தியாவில் மக்கள் தனித் தனி இனக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனிப் பட்ட பழக்க வழக்கங்கள், கடவுள் கோட்பாடுகள். இந்து மதம் என்ற ஒரு பொதுப் பெயரால் அப்போது இவைகள குறிக்கப்பட வில்லை. பின்னாளில் வந்த ஆட்சி மாறுதல்களினால் அனைத்து குழுக்களுக்கும், இந்து அல்லது இந்துமதம் என்ற ஒரு பொதுப் பெயர் உருவானது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1931 இல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1935 இல் அவர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம் 1937 இல் நடைமுறை படுத்தப் பட்டது. அதில் ஷெட்யூல்ட் ஜாதி  (Scheduled Caste) என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டது. ( Ref :  The Government of  India (Scheduled Castes ) Order 1936 )


பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தாழ்த்தப்பட்டட மற்றும் பழங்குடி மக்களுக்கு பட்டியல் இன மக்கள் ( Scheduled Caste and Tribes )  என்ற அடையாளம் தந்தனர். இதனை நீட்டி முழக்கி எழுதும் போது நீண்ட பெயராகத் தோன்றியது. எனவே பின்னாளில், காந்தியார்  கடவுளின் பிள்ளைகள்  என்ற அர்த்தத்தில் குறிப்பிட்ட ஹரிஜன் ( Harijan ) என்ற சொல் எளிமையாகவும், இந்தியா முழுமைக்கும்  அடையாளம் காணக் கூடியதாகவும் இருந்தபடியினால் அந்த சொல் ரொம்ப காலம் பயன் பட்டது. மேலும் காந்தியின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் காரணமாக ஹரிஜன் என்ற சொல்லை யாரும் எதுவும் சொல்லாமல் அரசாங்க அங்கீகாரம் பெற்ற சொல்லாக ஏற்றுக் கொண்டனர். அவர் எந்த உள் நோக்கமும் இன்றி சொன்ன அந்த சொல்லுக்கு பிற்பாடு பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டது. காந்தியை விமர்சனம் செய்தார்கள். இதனால் முன்னர் சொன்னது போல்  அரசு ஆணையில் குறிப்பிடப்பட்ட வார்த்தையான (பட்டியல் இன மக்கள்) எஸ்.சி/எஸ்.டி ( SC / ST ) என்ற பொதுப் பெயரால் அழைத்தனர்.

தமிழ் நாட்டில் வைணவப் பெரியார் ஸ்ரீ ராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களும் மனிதர்களே, மற்றவர்களுக்கு சமமானவர்களே என்று உண்ர்த்த, தாழ்த்தப்பட்டவர்க்ளை திருக்குலத்தார் என்று அழைத்தார். மேலும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்தார். பாரதியாரும் ஒரு தாழ்த்தபட்டவருக்கு பூணூல் போட்டார். இருவரது எண்ணமும் உயரிய ஒன்று. அந்த காலத்து சமூக சூழ்நிலையில் அவர்கள்  செய்த காரியம் பெரிய விஷயம் தான். இதனை விமர்சிப்பவர்களும் உண்டு. திருக்குலத்தார் என்ற அடையாள சொல்தான் பின்னாளில் திருநங்கைகள் என்ற சொல்லுக்கு அடிகோலியுள்ளது. திருக்குலத்தார் என்ற அடையாளச் சொல்லை இப்போது யாரும் பயன்படுத்துவது கிடையாது.

தமிழ் நாட்டில், திராவிட இயக்கங்களின் செல்வாக்கினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி திராவிடர் ( Adi Dravidar ) என்ற சொல்லால் குறித்தனர். ஆனால் நடைமுறையில் பறையர் சமூகத்தினரைத் தவிர மற்ற பள்ளர், அருந்ததியர் சமூகத்தினர் இதனை அதிகம் பயன்படுத்தவில்லை. இதனால் தமிழ் நாட்டில் ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிப்பது போலாயிற்று. எனவே மற்றவர்கள், ஆதிதிராவிடர் என்ற பெயரையே பொதுப் பெயராக வைக்க வேண்டாம் என்று சொல்வதோடு, தமிழ் நாட்டில் ஆதி திராவிடர் நலத் துறை என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இப்போது தலித் ( Dalit ) என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனாலும் இந்திய அரசியல் சாசனப்படி தலித் என்ற சொல்லுக்கு அங்கீகாரம் கிடையாது.  தலித் என்ற மராட்டிய சொல்லுக்கு ஒடுக்கப் பட்டவர்கள் என்று பொருள். தலித் என்ற சமஸ்கிருத சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஜோதிராவ் புலே ( Jyoti Rao Phule 1827 - 1890 ) என்ற மராட்டிய சமூக சீர்திருத்தவாதி.( படம் ) தலித் என்றால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உடைந்த     என்ற அர்த்தத்தில் வரும். தலித் என்ற சொல்லை மக்களிடையே அதிகம் அறிமுகம் செய்தவர் பஞ்சாபில் பிறந்த சீக்கியரான பகுஜன் இயக்க நிறுவனர் கன்சிராம்  ( Kanshi Ram ) அவர்கள்.  ஆரம்பத்தில் தலித் என்ற சொல் சிறுபான்மைப் பிரிவினரான முஸ்லிம் சமுதாய மக்களையும் எஸ்.சி / எஸ்.டி மக்களையும் உள்ளடக்கிய சொல்லாக சுட்டிக் காட்டப் பட்டது. முஸ்லிம் சமுதாய மக்கள் அதனை விரும்பாததோடு தங்களை முஸ்லிம் என்று அழைக்கப் படுவதையே விரும்பினர். ஹரிஜன் என்ற சொல்லுக்கு சரியான மாற்றுச் சொல்லாக தலித் என்னும் சொல் விளங்கியதால் பட்டியல் இனமக்கள் ஏற்றுக் கொண்டனர். மேடைகளிலும் எழுத்துக்களிலும் இந்த சொல் பிரபலமாகி விட்டது. இப்போது யாரும் தலித் என்ற சொல்லை அதன் மராட்டிய மொழியின் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் பார்ப்பதில்லை. SC/ST  என்ற பட்டியலின மக்களுக்கான ஒரு பொதுச் சொல்லாகவே பார்க்கின்றனர்.

சுனாமிக்குப் பிறகு சுனாமி என்ற சொல் தமிழில் வழக்காற்றில் வந்தது போல , தலித் என்ற சொல் மராட்டியத்தில் உருவாகி தமிழிலும் வழக்காற்றில் வந்து விட்டது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஒரு கலாச்சார நிகழ்வு “ என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் நூல் விமர்சனம் செய்துள்ளார். அதில், “ தலித் என்ற சொல், நமது தமிழ்ப் பேராசிரியர்களின் அனுமதி இன்றியே, மராட்டியிலிருந்து தமிழுக்கு வந்து உட்கார்ந்து விட்டது. அது முந்தைய அகராதியில் இல்லாதது “ என்று குறிப்பிடுகிறார். இந்த அகராதியில் தலித் என்பதற்கு சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல். the section of
society oppressed by the caste system  என்று சொல்லப் பட்டு உள்ளது.


இந்தியா முழுக்க உள்ள பட்டியல் இன மக்களை அடையாளம் காண, இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிந்த அர்த்தம் பொதிந்த தலித் என்ற சொல் பொதுப் பெயராக இருப்பது நல்லதுதான்.

Saturday, December 24, 2011

எனது பெரியார் நினைவு !

அன்று நான் பள்ளிச் சிறுவன். அப்போது நாங்கள் குடியிருந்த பகுதி திருச்சியில் காவிரி கரையோரம் இருந்த சிந்தாமணி என்னும் பகுதியாகும். அப்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு வரும் போதெல்லாம் எங்கள் பகுதியினுள் தண்ணீர் வந்து விடும். ஒருமுறை அவ்வாறு தண்ணீர் வந்து விட்டது. அப்போது மாலை நேரம். எல்லோரும் பெரியார் வெள்ளப்பகுதி மக்களை பார்க்க வந்து இருப்பதாகச் சொல்லி ஓடினார்கள்.என்னைப் போன்ற சிறுவர்களும் ஓடினோம். ஒரு வேன். உள்ளே கருப்பு சட்டையுடன் வெண் தாடியுடன் நல்ல நிறத்தில் ஒரு பெரியவர். அவர்தான் பெரியார். அருகில் அவர் ஆசையாய் வளர்த்த குட்டி நாய். பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரும் வணக்கம் சொன்னோம்.சிறுவர் சிறுமியர் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும்  “என்ன படிக்கிறீங்க“ என்று கேட்டார். சிறுவர்களாக இருந்தாலும் அவர் மதிப்பு கொடுத்தார். அன்றுதான் நான் பெரியாரை முதன் முதல் பார்த்தது. (அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்). அதன் பின் பெரியவர்கள் சொல்ல பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

அப்போதெல்லாம் திருச்சியில் எந்த அரசியல் கூட்டம் நடந்தாலும் டவுன் ஹால் மைதானத்தில்தான் நடைபெறும். விவரம் தெரிய ஆரம்பித்து பெரியவன் ஆனதும் டவுன்ஹால் கூட்டங்களுக்கு சென்று வருவேன். டவுன் ஹாலில் பெரியார் பேசுகிறார் என்றால் செல்வது வழக்கம். பெரியாரின் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் திராவிடர் கழக பாடல்களை இசைத்தட்டின் மூலம் ஒலி பெருக்கியில் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது ஒலித்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் “அவர்தான் பெரியார் பார் அவர்தாம் பெரியார்என்ற பாடல்தான். அந்த பாடலை கம்பீரமாக சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்ற குரலில் பாடி இருக்கிறார். பாடல்கள் முடிந்ததும் பெரியார் வரும்வரை கருப்புச் சட்டை அணிந்த பேச்சாளர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் கருப்புச் சட்டை இல்லாமல் வர மாட்டார்கள்.பெரியார் மேடையில் பேசும்போது தெளிவாக நன்கு புரியும்படி பேசுவார். மேலும் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசுவார்.அவர் பேசி முடிக்கும் வரை அந்த இடமே அமைதியாக இருக்கும்.

திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் படிக்கும்போது அவர் பற்றிய நூல்களை, அவரது கருத்துரைகளை  நிறைய படித்தேன். காசு விஷயத்தில் மிகவும் சிக்கனம் பார்த்த பெரியார், இந்த கல்லூரி கட்ட ரூபாய் ஐந்து லட்சமும்  9.65 ஏக்கர் நிலத்தினையும் அரசுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த கல்லூரியை அரசே தொடங்கியதால் கல்விப் பயன் அடைந்தோர் அதிகம். முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்பை தொடங்கி முடித்தவர்கள் இந்த கல்லூரியில் அநேகர்.  பெரியார் ஒரு  நாத்திகர், பிராமணர்களை திட்டினார் என்ற பிம்பத்தினை மட்டுமே பலரும் காட்டுகின்றனர். அவர் சொன்ன, செய்த சீர்திருத்தங்களை சொல்வதில்லை. அம்பேத்காரை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தவர் அவர். பெரியாரின் வரலாறு, அவர் செய்த தொண்டு இன்றைய தலை முறையினருக்கு தெரியவில்லை. யாரும் அவர்களுக்கு சொல்வதில்லை. அவர் நினைத்து இருந்தால் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவே வந்து இருக்க முடியும். கடைசி வரை பதவி ஆசை என்பதே இல்லாது வாழ்ந்த தொண்டு மனிதர் அவர்.

நான் திராவிடர் கழக உறுப்பினர் கிடையாது. அதே போல அவரது கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டவனும் இல்லை. பெரியார் செய்த தொண்டினால் பலன் அடைந்தவன். பெரியார் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்ற மன நிறைவைத் தவிர வேறொன்றும் எனக்கில்லை. இன்று பெரியார் மறைந்த தினம். ( டிசம்பர், 24, 1973 ). அதன் எதிரொலிதான் இந்த கட்டுரை.

அவர்தாம் பெரியார்! பார்
அவர்தாம் பெரியார்!
அன்பு மக்கள் கடலின் மீதில்!
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்!
அவர்தாம் பெரியார்!

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு!
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு!
மிக்க பண்பின் குடியிருப்பு!
விடுதலைப் பெரும்படையின் தொகுப்பு!
அவர்தாம் பெரியார்! பார்
அவர்தாம் பெரியார்!

-         புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
   (புகழ் மலர்கள்)


Friday, December 23, 2011

சசிகலாவின் பேட்டி எப்போது?


கடற்கரையோரம் இருக்கும் கூடங்குளத்தில் அணு மின் உலை வேண்டாம் என்று போராட்டம். வேண்டும் என்று மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டம். கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு பக்கம் உள்ள மாவட்டங்களில் அணையை உடைக்காதே என்று பதற்றம். மாநிலத் தலைநகர் சென்னையிலோ அ.தி.மு.கவில் இருந்து சசிகலா நீக்கம் என்று வெடி வெடித்து கொண்டாட்டம்.

சசிகலா நீக்கம் குறித்து ஜெயலலிதா பெயரில் அறிக்கை வந்ததோடு சரி. திடீர் என்று சோ வருகிறார். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல இதுபற்றி விலாவாரியாக பேட்டி தருகிறார். அவருடைய துக்ளக் பத்திரிக்கை அலுவல கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஏதோ குஜராத் மோடி வித்தைகள் நடப்பதாக சிலர் எழுதுகின்றனர். சசிகலா நீக்கம் வநதவுடன் பத்திரிகைகள் பரபரப்பு விற்பனை. ஆனால் அம்மா இன்னும் சசிகலாவின் நீக்கம்  பற்றி வாய் திறந்து எதுவும் சொல்ல வில்லை. திமுகவில் மாறன் சகோதரர்கள் மூலம் பிரச்சினை உண்டானபோது  “கோமாளி சண்டைஎன்று  ஜெயலலிதா வெளிப்படை யாக விமர்சனம் செய்தார். மூச்சுக்கு மூச்சு எதற்கெடுத்தாலும் கருணாநிதிதான் என்று வாரி இறைப்பவர் இது பற்றி இன்னும் ஏதும் சொல்லாது இருப்பது மர்ம தேசமாக உள்ளது. கட்சியிலிருந்து சசிகலா உறவுகள் என்று கட்டம் கட்டி வெளியேற்றப் படுபவர்கள் அனைவரும் கட்சியில் அதிகாரம் உள்ளவர்கள். ஆனால் கையில் பொறுப்புகளை சுமக்காதவர்கள். அவர்கள் யாரும் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் மவுனமாக உள்ளனர். கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் இதுபற்றி வாய் திறப்பதில்லை. சசிகலாவின் ஆட்களாக எம்பிக்களோ அல்லது எம்.எல்.ஏக்களோ யாரும் வெளியேற்றப்படாதது அதைவிட ஆச்சரியமாக உள்ளது.

இவைகள் அனைத்துக்கும் மேலாக சம்பந்தப்பட்ட சசிகலா எங்கிருக்கிறார்? ஏன் வெளியில் வந்து தன்மீது கட்சியில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாது இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மெளனம் கலைந்து வெளியில் வந்து சொன்னால்தான் விடைகள் கிடைக்கும். அதுசரி சசிகலாவின் பேட்டி எப்போது? ஒருவேளை ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்றாக வந்து பேட்டி தந்தாலும் தருவார்கள். கருணாநிதிதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Tuesday, December 20, 2011

ஜெயலலிதாவும் சசிகலாவும் – சிலரின் தப்புக் கணக்குகள்



. எம்ஜிஆரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் ஜெயலலிதா. கலைஞர் கருணாநிதியின் தலைமையில் நடராசனை திருமணம் செய்தவர் சசிகலா. இருவரும் இணைபிரியா தோழிகள் ஆனது, அப்போது I.A.S  அதிகாரியாக இருந்த, இப்போது அரசியல்வாதியாக இருக்கும் சந்திரலேகா என்ற பெண்மணியால். அவர் வேறு சமூகம். இவர் வேறு சமுதாயம். அவர் ரகசியம் இவருக்கு தெரியும். இவர் ரகசியம் அவருக்கு தெரியும். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அவர் ஓரெழுத்து நடிகரின் ஆலோசனைப்படி நடப்பது போல் தெரியும். இன்னொருவரோ தனது குடும்பத்தார் சொல் கேட்டு நடப்பது போல் தெரியும். உண்மையில் மற்ற எல்லோருமே இவர்களது சூத்திரக் கயிற்றில் ஆடும் பொம்மைகள்.

ஆண் ஆதிக்கம் மிகுந்த இந்த அரசியலில் ஜெயலலிதா இன்றும் சளைக்காமல் இருப்பதற்கு காரணம், சசிகலாதான். கட்சியை விட்டு வெளியேறிய பலரும் சொன்ன ஒரே வாசகம் “ஜெயலலிதா சசிகலாவின் பிடியில் இருக்கிறார் “ என்பதுதான். அந்த ஜெயலலிதா இப்போது சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதிலும் ஆளுங் கட்சியாக இருக்கும் போது? நிச்சயம் நம்ப முடியாது. முன்பு ஒருமுறையும் இதே நாடகம் நடந்தேறியது. இவர்களுக்குள் ஏதோ ஒரு திட்டம். அதனை வெளியுலகிற்காக வேறு விதமாக காட்டிக் கொண்டு திசை திருப்பி இருக்கிறார்கள். எப்போதும் நடக்கும் அதிரடி அரசியல். பத்திரிக்கைகள் பக்கங்களை நிரப்ப விஷயங்களைத் தேடிப் போக வேண்டியதில்லை.

இனி எல்லோரும் பரமக்குடி துப்பாக்கி சூடு, கூடங்குளம், பால் விலை, பஸ் கட்டணம் , முல்லைப் பெரியாறு இவைகளை விட்டு விட்டு இந்த விஷயத்துக்கு வந்துவிடுவார்கள்.  கொஞ்ச நாளில் மறுபடியும் கட்சியில் அவர்களை சேர்க்கும் வைபவம் இனிதே நடைபெறும். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதற்காக இப்போது வெடி வெடித்தவர்கள், இனிப்பு வழங்கியவர்கள் எல்லோருக்கும் அப்போது இவர்கள் இருவருமே சேர்ந்து வைப்பார்கள் ஆப்பு.

ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தில் ஒரு இடத்தில் வரும் வசனம். நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது”.


Sunday, December 18, 2011

கூடங்குளம் பகுதி மக்களுக்கு வெளியூர் மின்சாரம் தேவையா?


ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!
……..  ……. ……… ……. …… ………….  ……………. ………..  …………
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே!
கருணை தீபம் ஏற்றி வைத்தெங்கள் கைகளே!
            
             - கவிஞர் கண்ணதாசன் (படம் பணக்கார குடும்பம்)

கூடங்குளம் அணு மின் நிலையம் வெடித்தால், சுனாமி வந்தால், பூமி அதிர்ச்சி வந்தால் என்று பீதியை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லி சென்றார்கள். வந்தார்கள். இன்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் அண்மையில்  தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட  பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை மக்கள் பார்வையிலிருந்து திசை திருப்ப இந்த போராட்டம் உதவியது.மீடியாக் களும் உதவின. டேம் 999 படம் பீதியை கிளப்புவதாக தடை செய்யப்படுகிறது. ஆனால் கூடங்குளம் பீதி இன்னும் பேதி ஆகிக் கொண்டு இருக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆரம்பத்தில் எங்கே இருந்தார்கள்? போராட்டம் தொடங்கியது முதல் வேண்டாம் என்ற ஒரே கொள்கையிலேயெ நின்று இருந்தால் இவர்கள் உண்மையிலேயே போராடு கிறார்கள் என்று நம்பலாம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன், உள்ளூர் புள்ளிகள் ஊராட்சி பதவிகள் பெறுவதற்காக போராட்டத்தையே தள்ளி வைத்தனர். இப்போது எந்த நிபுணர் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் சொல்லும் ஆட்கள்தான் அறிக்கை தர வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட விவரங்களையும் கேட்க ஆரம்பித் துள்ளனர். எங்கோ இடிக்கிறது.

அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம். கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எந்த மின்சாரம் எங்கிருந்து வருகிறது? தமிழ்நாட்டில் இவர்கள் ஊருக்கு பல மைல்கள் தள்ளி உள்ள நெய்வேலியிருந்து அனல் மின்சாரமும், கல்பாக்கத்திலிருந்து இவர்கள் சொல்லும் அணு உலை மின்சாரமும் வருகிறது. நெய்வேலியில் சுரங்கத்தில் இறங்கி உயிரைக் கொடுத்து பாடுபடும் தொழிலா ளர்களின் வேர்வையில் வரும் மின்சாரம் இவர்கள் வீட்டு விளக்கை எரிய வைக்கிறது. கல்பாக்கமும் அவ்வாறே. சில சமயம் அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது கல்பாக்கம், நெய்வேலி ஆலை பணியாளர்கள் உழைப்பை, தியாகத்தை கேட்கும் இவர்களால், அங்குள்ள மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் தொழிற்சாலை களிலிருந்து பெறப்படும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்ல முடியுமா? வெளியூர் மின்சாரத்தை நிறுத்தினால் இவர்கள் சும்மா இருப்பார்களா?

இவர்களுக்குத் தேவையான நெல்,கோதுமை போன்ற உணவுப் பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்களா? இல்லையே. வெளியூர் விளை பொருட்கள்தான்.  திருப்பூர் தொழிலாளர்களின் உழைப்புதானே இவர்கள் போட்டுக் கொள்ளும் உள்ளாடை மேலாடைகள். அனைத்தும் வெளியிலிருந்து வரும் பொருட்கள். ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறைதானே இன்றும் இருக்கிறது. பணம் என்பது இடையில் ஒரு கருவி அவ்வளவே.

வெள்ளிப் பனிமலை மீது உலவவும், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடவும் கனவு கண்ட மகாகவி சுப்ரமண்ய பாரதியின்

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
   ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்
   உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்!

-         மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

என்ற வரிகளை உண்மையாக்குவோம். கூடங்குளம் தொடங்குவோம். மின்பற்றாக் குறையைப் போக்குவோம்.


  


Thursday, December 15, 2011

முல்லைப் பெரியாறும் - ஊழல் புகாரும் - உம்மன் சாண்டியும்


இப்போது கேரளாவின் காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சராக இருக்கும் உம்மன் சாண்டி, 1992-இல் அப்போதைய கருணாகரன் மந்திரி சபையில் நிதி அமைச்சர். அப்போது கேரளாவுக்கு மலேசியாவில் இருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. 32 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதியில் அரசுக்கு 2.32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப் பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் உம்மண் சாண்டியை விடுவித்து விட்டு அப்போதைய கேரள உணவு அமைச்சர் முஸ்தாபா மீது மட்டும் வழக்கு நடத்தப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அல்லது அ.தி.மு.க என்று மாறி மாறி ஆட்சிக்கு வருவதைப் போல கேரளாவில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகள் ஆட்சி வரும். பின்னாளில் அச்சுதானந்தன்  (இடதுசாரி) கேரள முதலமைச்சர் ஆனவுடன் உம்மன் சாண்டியை விடுவித்தது போன்று தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று முஸ்தாபா வழக்கு தொடர்ந்தார். அச்சுதானந்தன் அரசும் மேற்கொண்டு விசாரணை நடத்த கோர்ட்டில் மனு செய்தபடியினால், உம்மன் சாண்டி உட்பட அனைவர் மீதும் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

மேலே சொல்லப்பட்ட கருணாகரன் மந்திரி சபையில் அப்போது மின்வாரிய மந்திரியாக இருந்தவர் பாலகிருஷ்ணன் பிள்ளை. அவர் இடமலையாறு மின் திட்டத்தில் நடந்த ஊழல் காரணமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே கேரள மாநில உதய நாளை முன்னிட்டு கேரள அரசு இப்போது விடுவித்தது. இது மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியது.

இதே உம்மன் சாண்டி 2005-இல் கேரள முதலமைச்சர். அப்போது    திருவனந்தபுரத்தில் இருந்த அரசுக்கு சொந்தமான திருவாங்கூர் டைட்டானிய ஆலையை சுற்றுப்புற சூழ்நிலை காரணமாக மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை தடுக்க உம்மன் சாண்டி 256 கோடி ரூபாய் செலவில் மாசுக் கட்டுப்பாடு திட்டம் ஒன்றை அறிவித்தார். இதற்காக 62-கோடி ரூபாயில் வாங்கப்பட்ட இயந்திரம் பயனின்றி அப்படியே உள்ளது. இவர் அறிவித்த திட்டத்தை இவரது ஆட்சிக்குப் பிறகு வந்த இடதுசாரி கட்சி ரத்து செய்ததோடு, இந்த திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டியது. மத்திய தணிக்கைக் குழுவும் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டியது.  இடது சாரிகளின் ஆட்சிக்குப் பிறகு உம்மன் சாண்டி மீண்டும் இப்போது கேரள முதலமைச்சராக வந்துள்ளார்.  மார்க்சிஸ்டு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஐசக் என்பவர் இந்த ஊழலை காரணம் காட்டி உம்மன் சாண்டியை  பதவி விலக கோரியுள்ளார். எல்லா எதிர்க் கட்சிகளும் உம்மன் சாண்டிக்கு எதிராக தீவிர எதிர்ப்பு காட்டின.

இந்த விவகாரங்கள் எல்லாம் இப்போது பின்னுக்கு தள்ளப் பட்டுவிட்டன. வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கேரளாவில் பிறவாகம் என்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்யவும், காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மேல் சொல்லப்பட்ட குற்றசாட்டுக்களை திரையிட்டு மறைக்கவும் முல்லைப் பெரியாறு மலையாளி தமிழர் பிரச்சினை தூண்டிவிடப்பட்டுள்ளது.உண்மையிலேயே இடுக்கியில் நில அதிர்வு உண்டானதா அல்லது முல்லை பெரியாறு அணைக்காக கிளப்பி விடப்பட்டதா என்று ஆராய வேண்டும். இப்போது கேரளாவில் தேசிய ஒற்றுமை பேசுவோரும் , வர்க்கப் போராட்டக்காரகளும் எல்லோரும் இப்போது தமிழர் - மலையாளி என்ற உணர்வோடு மட்டுமே பிரச்சினையை பார்க்கின்றனர். போராட்டம் நடத்துகின்றனர். எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நான் கேரளா பக்கம் என்று சொல்கிறார். இங்கும் தமிழகத்தில் அதே அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ எளிய ஜனங்கள்தான்.