Saturday, December 24, 2011

எனது பெரியார் நினைவு !

அன்று நான் பள்ளிச் சிறுவன். அப்போது நாங்கள் குடியிருந்த பகுதி திருச்சியில் காவிரி கரையோரம் இருந்த சிந்தாமணி என்னும் பகுதியாகும். அப்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு வரும் போதெல்லாம் எங்கள் பகுதியினுள் தண்ணீர் வந்து விடும். ஒருமுறை அவ்வாறு தண்ணீர் வந்து விட்டது. அப்போது மாலை நேரம். எல்லோரும் பெரியார் வெள்ளப்பகுதி மக்களை பார்க்க வந்து இருப்பதாகச் சொல்லி ஓடினார்கள்.என்னைப் போன்ற சிறுவர்களும் ஓடினோம். ஒரு வேன். உள்ளே கருப்பு சட்டையுடன் வெண் தாடியுடன் நல்ல நிறத்தில் ஒரு பெரியவர். அவர்தான் பெரியார். அருகில் அவர் ஆசையாய் வளர்த்த குட்டி நாய். பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரும் வணக்கம் சொன்னோம்.சிறுவர் சிறுமியர் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும்  “என்ன படிக்கிறீங்க“ என்று கேட்டார். சிறுவர்களாக இருந்தாலும் அவர் மதிப்பு கொடுத்தார். அன்றுதான் நான் பெரியாரை முதன் முதல் பார்த்தது. (அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்). அதன் பின் பெரியவர்கள் சொல்ல பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

அப்போதெல்லாம் திருச்சியில் எந்த அரசியல் கூட்டம் நடந்தாலும் டவுன் ஹால் மைதானத்தில்தான் நடைபெறும். விவரம் தெரிய ஆரம்பித்து பெரியவன் ஆனதும் டவுன்ஹால் கூட்டங்களுக்கு சென்று வருவேன். டவுன் ஹாலில் பெரியார் பேசுகிறார் என்றால் செல்வது வழக்கம். பெரியாரின் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் திராவிடர் கழக பாடல்களை இசைத்தட்டின் மூலம் ஒலி பெருக்கியில் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது ஒலித்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் “அவர்தான் பெரியார் பார் அவர்தாம் பெரியார்என்ற பாடல்தான். அந்த பாடலை கம்பீரமாக சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்ற குரலில் பாடி இருக்கிறார். பாடல்கள் முடிந்ததும் பெரியார் வரும்வரை கருப்புச் சட்டை அணிந்த பேச்சாளர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் கருப்புச் சட்டை இல்லாமல் வர மாட்டார்கள்.பெரியார் மேடையில் பேசும்போது தெளிவாக நன்கு புரியும்படி பேசுவார். மேலும் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசுவார்.அவர் பேசி முடிக்கும் வரை அந்த இடமே அமைதியாக இருக்கும்.

திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் படிக்கும்போது அவர் பற்றிய நூல்களை, அவரது கருத்துரைகளை  நிறைய படித்தேன். காசு விஷயத்தில் மிகவும் சிக்கனம் பார்த்த பெரியார், இந்த கல்லூரி கட்ட ரூபாய் ஐந்து லட்சமும்  9.65 ஏக்கர் நிலத்தினையும் அரசுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த கல்லூரியை அரசே தொடங்கியதால் கல்விப் பயன் அடைந்தோர் அதிகம். முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்பை தொடங்கி முடித்தவர்கள் இந்த கல்லூரியில் அநேகர்.  பெரியார் ஒரு  நாத்திகர், பிராமணர்களை திட்டினார் என்ற பிம்பத்தினை மட்டுமே பலரும் காட்டுகின்றனர். அவர் சொன்ன, செய்த சீர்திருத்தங்களை சொல்வதில்லை. அம்பேத்காரை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தவர் அவர். பெரியாரின் வரலாறு, அவர் செய்த தொண்டு இன்றைய தலை முறையினருக்கு தெரியவில்லை. யாரும் அவர்களுக்கு சொல்வதில்லை. அவர் நினைத்து இருந்தால் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவே வந்து இருக்க முடியும். கடைசி வரை பதவி ஆசை என்பதே இல்லாது வாழ்ந்த தொண்டு மனிதர் அவர்.

நான் திராவிடர் கழக உறுப்பினர் கிடையாது. அதே போல அவரது கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டவனும் இல்லை. பெரியார் செய்த தொண்டினால் பலன் அடைந்தவன். பெரியார் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்ற மன நிறைவைத் தவிர வேறொன்றும் எனக்கில்லை. இன்று பெரியார் மறைந்த தினம். ( டிசம்பர், 24, 1973 ). அதன் எதிரொலிதான் இந்த கட்டுரை.

அவர்தாம் பெரியார்! பார்
அவர்தாம் பெரியார்!
அன்பு மக்கள் கடலின் மீதில்!
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்!
அவர்தாம் பெரியார்!

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு!
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு!
மிக்க பண்பின் குடியிருப்பு!
விடுதலைப் பெரும்படையின் தொகுப்பு!
அவர்தாம் பெரியார்! பார்
அவர்தாம் பெரியார்!

-         புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
   (புகழ் மலர்கள்)


Sunday, December 18, 2011

கூடங்குளம் பகுதி மக்களுக்கு வெளியூர் மின்சாரம் தேவையா?


ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!
……..  ……. ……… ……. …… ………….  ……………. ………..  …………
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே!
கருணை தீபம் ஏற்றி வைத்தெங்கள் கைகளே!
            
             - கவிஞர் கண்ணதாசன் (படம் பணக்கார குடும்பம்)

கூடங்குளம் அணு மின் நிலையம் வெடித்தால், சுனாமி வந்தால், பூமி அதிர்ச்சி வந்தால் என்று பீதியை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லி சென்றார்கள். வந்தார்கள். இன்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் அண்மையில்  தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட  பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை மக்கள் பார்வையிலிருந்து திசை திருப்ப இந்த போராட்டம் உதவியது.மீடியாக் களும் உதவின. டேம் 999 படம் பீதியை கிளப்புவதாக தடை செய்யப்படுகிறது. ஆனால் கூடங்குளம் பீதி இன்னும் பேதி ஆகிக் கொண்டு இருக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆரம்பத்தில் எங்கே இருந்தார்கள்? போராட்டம் தொடங்கியது முதல் வேண்டாம் என்ற ஒரே கொள்கையிலேயெ நின்று இருந்தால் இவர்கள் உண்மையிலேயே போராடு கிறார்கள் என்று நம்பலாம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன், உள்ளூர் புள்ளிகள் ஊராட்சி பதவிகள் பெறுவதற்காக போராட்டத்தையே தள்ளி வைத்தனர். இப்போது எந்த நிபுணர் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் சொல்லும் ஆட்கள்தான் அறிக்கை தர வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட விவரங்களையும் கேட்க ஆரம்பித் துள்ளனர். எங்கோ இடிக்கிறது.

அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம். கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எந்த மின்சாரம் எங்கிருந்து வருகிறது? தமிழ்நாட்டில் இவர்கள் ஊருக்கு பல மைல்கள் தள்ளி உள்ள நெய்வேலியிருந்து அனல் மின்சாரமும், கல்பாக்கத்திலிருந்து இவர்கள் சொல்லும் அணு உலை மின்சாரமும் வருகிறது. நெய்வேலியில் சுரங்கத்தில் இறங்கி உயிரைக் கொடுத்து பாடுபடும் தொழிலா ளர்களின் வேர்வையில் வரும் மின்சாரம் இவர்கள் வீட்டு விளக்கை எரிய வைக்கிறது. கல்பாக்கமும் அவ்வாறே. சில சமயம் அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது கல்பாக்கம், நெய்வேலி ஆலை பணியாளர்கள் உழைப்பை, தியாகத்தை கேட்கும் இவர்களால், அங்குள்ள மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் தொழிற்சாலை களிலிருந்து பெறப்படும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்ல முடியுமா? வெளியூர் மின்சாரத்தை நிறுத்தினால் இவர்கள் சும்மா இருப்பார்களா?

இவர்களுக்குத் தேவையான நெல்,கோதுமை போன்ற உணவுப் பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்களா? இல்லையே. வெளியூர் விளை பொருட்கள்தான்.  திருப்பூர் தொழிலாளர்களின் உழைப்புதானே இவர்கள் போட்டுக் கொள்ளும் உள்ளாடை மேலாடைகள். அனைத்தும் வெளியிலிருந்து வரும் பொருட்கள். ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறைதானே இன்றும் இருக்கிறது. பணம் என்பது இடையில் ஒரு கருவி அவ்வளவே.

வெள்ளிப் பனிமலை மீது உலவவும், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடவும் கனவு கண்ட மகாகவி சுப்ரமண்ய பாரதியின்

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
   ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்
   உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்!

-         மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

என்ற வரிகளை உண்மையாக்குவோம். கூடங்குளம் தொடங்குவோம். மின்பற்றாக் குறையைப் போக்குவோம்.


  


Thursday, December 15, 2011

முல்லைப் பெரியாறும் - ஊழல் புகாரும் - உம்மன் சாண்டியும்


இப்போது கேரளாவின் காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சராக இருக்கும் உம்மன் சாண்டி, 1992-இல் அப்போதைய கருணாகரன் மந்திரி சபையில் நிதி அமைச்சர். அப்போது கேரளாவுக்கு மலேசியாவில் இருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. 32 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதியில் அரசுக்கு 2.32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப் பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் உம்மண் சாண்டியை விடுவித்து விட்டு அப்போதைய கேரள உணவு அமைச்சர் முஸ்தாபா மீது மட்டும் வழக்கு நடத்தப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அல்லது அ.தி.மு.க என்று மாறி மாறி ஆட்சிக்கு வருவதைப் போல கேரளாவில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகள் ஆட்சி வரும். பின்னாளில் அச்சுதானந்தன்  (இடதுசாரி) கேரள முதலமைச்சர் ஆனவுடன் உம்மன் சாண்டியை விடுவித்தது போன்று தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று முஸ்தாபா வழக்கு தொடர்ந்தார். அச்சுதானந்தன் அரசும் மேற்கொண்டு விசாரணை நடத்த கோர்ட்டில் மனு செய்தபடியினால், உம்மன் சாண்டி உட்பட அனைவர் மீதும் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

மேலே சொல்லப்பட்ட கருணாகரன் மந்திரி சபையில் அப்போது மின்வாரிய மந்திரியாக இருந்தவர் பாலகிருஷ்ணன் பிள்ளை. அவர் இடமலையாறு மின் திட்டத்தில் நடந்த ஊழல் காரணமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே கேரள மாநில உதய நாளை முன்னிட்டு கேரள அரசு இப்போது விடுவித்தது. இது மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியது.

இதே உம்மன் சாண்டி 2005-இல் கேரள முதலமைச்சர். அப்போது    திருவனந்தபுரத்தில் இருந்த அரசுக்கு சொந்தமான திருவாங்கூர் டைட்டானிய ஆலையை சுற்றுப்புற சூழ்நிலை காரணமாக மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை தடுக்க உம்மன் சாண்டி 256 கோடி ரூபாய் செலவில் மாசுக் கட்டுப்பாடு திட்டம் ஒன்றை அறிவித்தார். இதற்காக 62-கோடி ரூபாயில் வாங்கப்பட்ட இயந்திரம் பயனின்றி அப்படியே உள்ளது. இவர் அறிவித்த திட்டத்தை இவரது ஆட்சிக்குப் பிறகு வந்த இடதுசாரி கட்சி ரத்து செய்ததோடு, இந்த திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டியது. மத்திய தணிக்கைக் குழுவும் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டியது.  இடது சாரிகளின் ஆட்சிக்குப் பிறகு உம்மன் சாண்டி மீண்டும் இப்போது கேரள முதலமைச்சராக வந்துள்ளார்.  மார்க்சிஸ்டு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஐசக் என்பவர் இந்த ஊழலை காரணம் காட்டி உம்மன் சாண்டியை  பதவி விலக கோரியுள்ளார். எல்லா எதிர்க் கட்சிகளும் உம்மன் சாண்டிக்கு எதிராக தீவிர எதிர்ப்பு காட்டின.

இந்த விவகாரங்கள் எல்லாம் இப்போது பின்னுக்கு தள்ளப் பட்டுவிட்டன. வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கேரளாவில் பிறவாகம் என்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்யவும், காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மேல் சொல்லப்பட்ட குற்றசாட்டுக்களை திரையிட்டு மறைக்கவும் முல்லைப் பெரியாறு மலையாளி தமிழர் பிரச்சினை தூண்டிவிடப்பட்டுள்ளது.உண்மையிலேயே இடுக்கியில் நில அதிர்வு உண்டானதா அல்லது முல்லை பெரியாறு அணைக்காக கிளப்பி விடப்பட்டதா என்று ஆராய வேண்டும். இப்போது கேரளாவில் தேசிய ஒற்றுமை பேசுவோரும் , வர்க்கப் போராட்டக்காரகளும் எல்லோரும் இப்போது தமிழர் - மலையாளி என்ற உணர்வோடு மட்டுமே பிரச்சினையை பார்க்கின்றனர். போராட்டம் நடத்துகின்றனர். எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நான் கேரளா பக்கம் என்று சொல்கிறார். இங்கும் தமிழகத்தில் அதே அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ எளிய ஜனங்கள்தான்.


Sunday, December 11, 2011

பாட்டுக்கொரு புலவனே ! பாரதியே !

 (மகா கவி சுப்ரமண்ய பாரதியார் 1882 டிசம்பர் 11 - 1921 செப்டம்பர் 12 )

பாட்டுக்கொரு புலவனே ! பாரதியே ! மேட்டுக் குடியில் பிறந்தாலும் மண்ணில் நாட்டுக் குடிமகனைப் பாடியவனே ! தேசத்தை மட்டுமே நீ நினைத்தாய் ! இன்றோ சிலர் நாசத்தை மட்டுமே நினைக்கின்றனர் ! உன் புகழ் பாடுவோம் ! வார்த்தைகள் வரவில்லை ! வசனமாய் தெரிக்கின்றன !

எமர்ஜென்சியில் தலித் மக்கள் பெற்ற அரசாங்க வேலை வாய்ப்புகள்


இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்றால் அது, இந்திரா காந்தி ( பிறப்பு 19.நவம்பர்.1917 இறப்பு 31.அக்டோபர். 1984 ) அவர்களை மட்டுமே குறிக்கும். அணு ஆயுதம் ஏதும் இன்றி உலகினை இந்தியாவின் பக்கம் திருப்பியவர். அவர் ஆட்சி காலத்தில் (1975) அவர் கொண்டு வந்த எமர்ஜென்சி (EMERGENCY) எனப்படும் நெருக்கடி நிலை கால தவறுகளை மட்டுமே இன்றும் பெரிதாக பலர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது நன்மைகளும் ஏற்பட்டன. இப்போதும் சிலர் மறுபடியும் எமர்ஜென்சி வரணும் சார்! அப்போதுதான் திருந்துவானுங்கஎன்று சொல்லுவதைக் கேட்கலாம்.

அந்த எமர்ஜென்சியின் போது, ரெயில்கள் குறித்த நேரத்தில் கிளம்பி குறித்த இடங்களை சரியான நேரத்தில் சென்று சேர்ந்தன. உதாரணமாக 8.05-க்கு புறப்பட வேண்டிய ரெயில் சரியாக 8.05-க்கே புறப்பட்டது. அரசு ஊழியர்கள் நேரம் தவறாமல் வேலைக்கு வந்து சேர்ந்தனர். அலுவலக நேரங்களில் அரட்டை அடிப்பது, பத்திரிக்கைகள் படிப்பது போன்ற வேலைகள் இல்லை. வெற்றிலை பாக்கு போட, புகை பிடிக்க என்று சொல்லிக் கொண்டு சொந்த வேலைகளைப் பார்க்க அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பயந்தார்கள். அவ்வளவு ஏன், தங்களைத் தேடி தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு யாரும் வரக் கூடாது என்று ஊழியர்களே கேட்டுக் கொண்டனர். கோப்புகள் தாமதமின்றி நகர்ந்தன. லஞ்சம் என்பது பெரும்பாலும் இல்லை. சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்தார்கள். உண்மையில் அதிகாரத்திற்கும், சட்டத்திற்கும் பயந்தார்கள்..

அந்த சமயம், இந்தியா சுதந்திரம் அடைந்து 28 –ஆண்டுகள் ஆகியும் SC/ST பிரிவினர் வேலை வாய்ப்பில் டாக்டர் அம்பேத்கார் பெற்றுத் தந்த சலுகைகளை அடைய முடியாதவர் களாகவே இருந்தனர். தகுதி வாய்ந்தவர்கள் இருந்தும் அரசு அலுவலகங்களில்  (குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில்) அவர்கள் நியமிக்கப் படவில்லை. வெளியில் மட்டும் இட ஒதுக்கீடு கொள்கை பேசப்பட்டு வந்தது. தாழ்த்தப் பட்ட பழங்குடி மக்களின் ஆதரவினைப் பெறவும் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்வாக்கை குறைக்கவும்  SC/ST மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நினைத்தார். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் SC/ST பணியாளர்களை சட்டப்படி நியமிக்க உத்தரவிட்டார். வேறு சமயமாக இருந்திருந்தால் உத்தரவை காற்றில் பறக்க விட்டு இருப்பார்கள். எமர்ஜென்சி நேரம் என்பதால் பொதுத்துறை அலுவலகங் களில் அந்த சமயம் SC/ST பிரிவினருக்கு ஆட்களை நியமனம் செய்தனர். பலருக்கு வேலை கிடைத்தது. அதுவரை அம்பேத்க்கார் வடிவமைத்த சட்டம் என்பது ஏட்டுச் சுரைக்காய் வடிவில்தான் இருந்தது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த SC/ST யினருக்கான  வேலை வாய்ப்பு இன்றும் மத்திய அரசுப் பணி நியமனங்களில் தொடர்கிறது. சட்டங்கள் இருந்தாலும் அதனை செயல் படுத்த உறுதுணையான ஒரு அரசாங்கமும் தேவை என்பதனையே இது காட்டுகிறது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி நேரத்தில் அரசு அலுவலகங்களில் SC/ST  மக்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட விவரம் இன்னும் பலருக்கு புரியாது. ஏன் தலித்துகளிலேயே பலருக்கு இந்த விவரம் தெரியாது.

Thursday, December 8, 2011

திசை மாறும் தலித் மாணவர்கள், இளைஞர்கள்.


                                           இப்போதெல்லாம் தமிழ் தமிழன் தமிழ் நாடு என்று உசுப்பி விட்டால் போதும், போஸ்டர் ஒட்டுவதும், முன்னின்று போராடுவதும், தீக்குளிப்பு செய்வதும், ரெயில் மறியல் பஸ் மறியல் என்று  சிறைக்கு சென்று வாழ்க்கையை தொலைப்பதும் பெரும்பாலானோர் தலித் மாணவர்களும் இளைஞர்களும் தான். ஆனால் வழக்கு வாய்தா என்று அவர்கள் அலையும் போது அவர்களுக்காக யாரும் முன்னின்று உதவுவது கிடையாது. அவர்களைப் பெற்றவர்கள்தான் பணம் செலவு செய்துகொண்டு இருக்கின்ற சொத்துக்களை இழந்தும் தவிக்கிறார்கள். குடும்பமே தத்தளிக்கிறது. காவல்துறையின் வழக்கு அவர்கள் மீது  இருப்பதால் அரசு உத்தியோகமும் கிடைப்பதில்லை.  இந்த அரசியல்வாதிகளும் தங்கள் வளர்ச்சிக்கும், கூட்டம் காண்பிப்பதற்கும் அவர்களை ந்ன்கு பயன்படுத்திக்  கொள்கிறார்கள். அன்றைய ஆண்டான் அடிமை அணுகு முறை இப்போது அரசியல் கட்சிகளிடம் வேறு வடிவில் உள்ளது.   அம்பேத்கார் இதற்காகவா பாடுபட்டார்?

மீனவர்கள் மீது தாக்குதல் என்றவுடன் ஆவேச அறிக்கைகள்,சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் என்று ஒரே உணர்ச்சிப் பிழம்பு மயம். அதே போல முல்லைப் பெரியாறு என்றவுடன் ஆவேசம் கொப்பளிக்க, நரம்பு புடைக்க அறிக்கைகள், நடை பயணங்கள் என்று அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. இவைகளை வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஆனால், ஏன் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும்? என்றுதான் கேள்வி.

தமிழ் நாட்டில் அண்மையில்  பரமக்குடியில் தலித்துகளின் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இவர்கள் செய்த போராட்டங்கள் என்ன? மருத்துவமனை விசாரிப்புகள் மற்றும் கடமையே என்று விடப்பட்ட அறிக்கைகள்.அத்தோடு சரி. சுட்டவன் தமிழன். சுடப் பட்டவனும் தமிழன். சுடப்பட்டது தமிழ் நாட்டில். சுட்டவர்கள் தமிழக ஆட்சியாளார்கள். இந்த ஆவேசம் மறியல் தலித் மக்களுக்காக  ஏன் செய்யப்பட வில்லை. அரசே முன்வந்த போதும் ஒரு கட்சியின் பொறுப்பாளர்  நீதி விசாரணையே தேவையில்லை என்று அவையிலேயே சொன்னார். உள்ளாட்சி தேர்தல் வந்தவுடன் யாருடன் கூட்டு என்று எல்லாவற்றையும்  மறந்து ஓடிப் போனார்கள்.  இன்று அரசியல் பண்ண போராட்டம் தேடி அலை பாய்கிறார்கள். கூடங்குளத்தை பிடித்துக் கொண்டு பரமக்குடியை விட்டு விட்டார்கள். இப்போது முல்லைப் பெரியாறு முழக்கம். தலித் தலைவர்களும் தலித் மக்களும் அடுத்தவர்களுக்காக போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தும் அவர்களது உரிமை  போராட்டத்திற்கு மற்றவர்கள் முன்னிற்பதில்லை. இதுதான் இன்றைய அரசியல்.

தமிழ் தமிழன் தமிழ் நாடு என்று உணர்ச்சி பொங்க மற்றவர்களுக்காக  போராடும் தலித்துகளே உங்கள் மக்களுக்கு ஒரு நீதி அடுத்தவர்களுக்கு ஒரு நீதி என்று  கடைபிடிக்கும் அரசியல்வாதிகளின் பிழைப்புக்கு தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள். தலித் மக்கள் எங்கிருந்தாலும்,  எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்கள் நிலைமை ஒன்றுதான். உங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதனைச் செய்யுஙகள். நீங்கள் முன்னேறினால் உங்கள் வழியே ஒரு தலைமுறை முன்னேறும்.  பல தலை முறைகள் முன்னேறினால், ஒரு சமுதாயமே முன்னேறும். வழக்கு வாய்தாக்களில் குடும்பத்தை பலிகடா ஆக்கி விடாதீர்கள்.












Wednesday, December 7, 2011

கேரளம் – சொந்த மாநிலத்தில் வேலை கேட்காமல் அணை உடைப்பு வேலை எதற்கு?


கேரளா என்றால் படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் என்று பெயர். ஆனால் அவர்களுக்கு சொந்த மாநிலமான கேரளத்தில் அவர்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் இல்லை. எனவே அண்டை மாநிலங்களில்தான் பெரும்பாலா னோர் பணி புரிகின்றனர். மத்திய அரசுப் பணிகளில் குறிப்பாக ரெயில்வே துறையில் தமிழ் நாட்டில் அதிகம் பேர் உள்ளனர் பாலக்காடு டிவிஷன் என்பதே தமிழ்நாட்டில் ரெயிவேயில் பணிபுரியும் கேரள மக்களின் வசதிக்காக தொடங்கப்பட்ட ஒன்று. இன்றும் தமிழ் நாட்டில் பல ரெயில்வே அதிகாரிகள் கேரளாக்காரர்கள்தான். திருச்சியில் பெல் ( BHEL ) நிறுவனம் தொடங்கியவுடன் அதிகமாக உள்ளே நுழைந்தவர்கள் இவர்கள்தான். கோவை நகரில் பல வியாபாரங்களை நடத்தி வருவதும் இவர்கள்தான். “ டீக்கடை நாயர் , பாலக்காடு அய்யர்போன்ற வார்த்தைகள்  தமிழ் நாட்டில் அவர்களது தனித் தன்மையைக் காட்டும்.

தமிழ் நாட்டிலிருந்து  பெரும்பாலும் இந்த கேரள மாநிலத்திற்கு விளை பொருட்கள், உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து இறைச்சிக்காக  லாரி லாரியாக கொண்டு செல்லப்படும் அடி மாடுகள் எனப்படும் பசு மாடுகளும் , எருமை மாடுகளும் கேரளாவுக்கே அதிகம். ஆற்று மணல் அதிகம் கடத்தப் படுவது இங்கிருந்து  கேரளாவுக்குத்தான். அது மட்டுமன்றி சென்னையில்தான்  இவர்களது மலையாள திரைப்படங்கள் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டன. அவர்களது திரைப்படத் துறை சென்னையில்தான் வளர்ச்சி பெற்றது.

இங்குள்ள தமிழர்கள் யாரும் அவர்களை அன்னியர்களாக பார்க்கவில்லை. தங்கள் உறவினர்களாகவே நினைத்தனர்.  தமிழக முதல்வராக எம்ஜிஆரையே ஏற்றுக் கொண்டவர்கள் இந்த தமிழ் மக்கள்.  இன்றும் பல இடங்களில், குறிப்பாக கிறிஸ்த , முஸ்லிம் மக்களிடையே தமிழ் மலையாளி கலப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. யாரும் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை.கேரளாவில் இருக்கும் அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழர்களால் வருமானமும் வியாபாரமும் அதிகம் கிடைக்கின்றன.அதே போல வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வரும் கேரள கிறிஸ்தவர்கள் அதிகம்.

எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலமான தமிழ் நாட்டையே அண்டி நிற்கும் கேரள மக்களுக்கு தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர மட்டும் மனது கிடையாது. பென்னி குயிக் என்ற ஆங்கிலேயர் கட்டிய அமைதியான, பலமான  முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கடப்பாரைகளோடு சென்று போராடுகிறார்கள். உடைக்க முயல்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர். கேரள அரசியல்வாதிகளே முதலில் அந்த இளைஞர்களுக்கு கைகளில் கடப்பாரையை கொடுப்பதை  விட உங்கள் மாநிலத்திலேயே வேலை வாய்ப்பை கொடுங்கள். தமிழ் நாட்டிலிருந்து வரும் எதனையும் வேண்டாம் என்று சொல்லுங்கள். தமிழ் நாட்டில் இருக்கும் கேரளக் காரர்களை உங்கள் மாநிலத்திற்கு திரும்பி வரச்  சொல்ல உங்களுக்கு தைரியம் உண்டா? அவர்களே அதனை விரும்ப மாட்டார்கள்.தமிழ் மக்களும் அந்த காரியத்தை செய்ய விரும்ப மாட்டார்கள்.ஏனெனில், இங்கு வாழும் பெரும்பாலான கேரளாக்காரர்கள் வாழும் முறையால் பேசும் மொழியால் தமிழராகி விட்டனர்.

அரசியல்வாதிகளே! இந்திய ஒற்றுமையை உங்கள் சுய நலத்திற்காக உடைத்து விடாதீர்கள்.

சிந்து நதியின்மிசை நிலவினிலே
     சேர நன்னாட்டிளம் பெண்க ளுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
     தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
     காவிரி வெற்றிலைக்கு மாறுகொள் வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
     சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்

என்ற பாரதியின் கனவை சிதைத்து விடாதீர்கள்!

Monday, December 5, 2011

அண்ணலே ! அம்பேத்காரே !





ஆயுதம் ஏந்தாமல் அறிவுப் புரட்சி செய்த
அண்ணலே ! அம்பேத்காரே !
அனைத்து மக்களும் சமமாய் வாழ்ந்திட
சமூக நீதி தந்தவரே!
அண்ணலே ! அம்பேத்காரே !
உம்மை மறவோம் !

Thursday, December 1, 2011

சமூக ஆர்வலர் அவதாரம்.


நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும் திடீர் திடீர் என்று சமூக ஆர்வலர்கள். தனது சொந்த பணத்தில் ஒரு ரூபாய் எடுத்து பொதுக் காரியத்திற்கென்று கொடுத்து இருக்கமாட்டார்கள். அவர்களெல்லாம் சமூக ஆர்வலர் ( SOCIAL ACTIVIST ) அவதாரம் எடுக்கிறார்கள். தினசரிகளை புரட்டினால், டீவியைத் திறந்தால் அவர்கள்தான். உண்மையாகவே போராடுபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு கதர் தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டால் போதும், அவர் காந்தியவாதி ஆகி விடுகிறார். ஊழலை ஒழிக்கப் பாடுபடப் போவதாகச் சொல்கிறார். உண்ணாவிரதம் அது இது என்று தொடர்கிறார். இதற்கு முன் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார், எங்கே போய் இருந்தார் என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது. ஏதேனும் ஒன்றைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் அவர் போராடுவார் அவர் சொல்வதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். மணிக் கணக்கில் அதைப் பற்றி பேசுவார். கொஞ்சகாலம் அடுத்த பரபரப்பான செய்தி வரும்வரை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் சந்தோஷத்தில் அமிழ்ந்து விடுவார். ஒரு நிலையான தன்மை கிடையாது.

ரோட்டில் ஆடு மாடுகள் அலைந்து கொண்டு இருக்கும். அதனால் ஏற்படும் விபத்துக்களை எண்ணி யாரேனும் புகார் செய்யும் பட்சத்தில் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும். மாட்டின் சொந்தக்காரர்கள் ஜீவகாருண்யர்களாக மாறி தடை வாங்கி விடுவார்கள் இது மாதிரியான சமூக ஆர்வலருக்கு மனிதனை விட மாடுகள் படும் கஷ்டம் தாங்க முடியாது.     இன்னும் சில சமூக ஆர்வலர்கள் தங்கள் பெயர் பத்திரிகைகளில் அடிபட  வேண்டும் என்பதற்காகவே ஏதேனும் பீதியை கிளப்பிக் கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பார்கள். மொட்டைக் கடிதாசி போட்டே சமூக சேவை செய்யும் ஆர்வலர்களும் உண்டு. மாதம் ரெண்டு  தட்டி விட்டால்தான் அவர் பிறவிப் பயனையே அடைவார். இன்னும் சிலர் தங்கள் சொந்த பிரச்சினை தீர அதனை பொதுப் பிரச்சினையாக மாற்றி சமூக ஆர்வலராக மாறுவார். இவரால் உண்டாகும் ஜாதிச் சண்டை ஊரே பற்றி எரியும்.  சில சமூக ஆர்வலர்கள் நாளடைவில் அரசியல்வாதியாக மாறி விடுகின்றனர். அப்புறம் அவரது நோக்கமே குடும்ப நலனாக மாறிவிடுகிறது. ஆனாலும்  அனைத்து ஆர்வலர்களும் போடும் ஒரே கோஷம் “ ஒன்று படுவோம்! போராடுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! “ என்பதுதான். எந்த வெற்றி என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

உருப்படியான காரியங்கள் செய்யும் உண்மையான ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியில் விளம்பரம் இல்லாமல், சொந்தக் காசை செலவு செய்து,  செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதனையும் எதிர்பார்க்காதவர்கள். கும்பல் சேர்க்க, கோஷம் போடத் தெரியாதவர்கள்.

எது எப்படியோ ச்மூக ஆர்வலர்களால் ஏதேனும் ( நல்லதும் அல்லாததும் ) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வைப் பாட்டி அன்றே சமூக ஆர்வலர் பற்றி சொன்ன கருத்து ஒரு தனிப் பாடலில் உள்ளது.

சித்திரமும் கைப்பழக்கம் ; செந்தமிழும் நாப்பழக்கம் ;
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் ; - நித்தம்
நடையும் நடைப் பழக்கம் ; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்             _ ஒளவையார்.

இதில் கடைசி வரியில் அவர் சொன்ன நட்பும், தயையும், கொடையும் பிறவிக் குணம் என்பதே அது.