Sunday, December 18, 2011

கூடங்குளம் பகுதி மக்களுக்கு வெளியூர் மின்சாரம் தேவையா?


ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!
……..  ……. ……… ……. …… ………….  ……………. ………..  …………
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே!
கருணை தீபம் ஏற்றி வைத்தெங்கள் கைகளே!
            
             - கவிஞர் கண்ணதாசன் (படம் பணக்கார குடும்பம்)

கூடங்குளம் அணு மின் நிலையம் வெடித்தால், சுனாமி வந்தால், பூமி அதிர்ச்சி வந்தால் என்று பீதியை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லி சென்றார்கள். வந்தார்கள். இன்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் அண்மையில்  தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட  பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை மக்கள் பார்வையிலிருந்து திசை திருப்ப இந்த போராட்டம் உதவியது.மீடியாக் களும் உதவின. டேம் 999 படம் பீதியை கிளப்புவதாக தடை செய்யப்படுகிறது. ஆனால் கூடங்குளம் பீதி இன்னும் பேதி ஆகிக் கொண்டு இருக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆரம்பத்தில் எங்கே இருந்தார்கள்? போராட்டம் தொடங்கியது முதல் வேண்டாம் என்ற ஒரே கொள்கையிலேயெ நின்று இருந்தால் இவர்கள் உண்மையிலேயே போராடு கிறார்கள் என்று நம்பலாம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன், உள்ளூர் புள்ளிகள் ஊராட்சி பதவிகள் பெறுவதற்காக போராட்டத்தையே தள்ளி வைத்தனர். இப்போது எந்த நிபுணர் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் சொல்லும் ஆட்கள்தான் அறிக்கை தர வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட விவரங்களையும் கேட்க ஆரம்பித் துள்ளனர். எங்கோ இடிக்கிறது.

அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம். கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எந்த மின்சாரம் எங்கிருந்து வருகிறது? தமிழ்நாட்டில் இவர்கள் ஊருக்கு பல மைல்கள் தள்ளி உள்ள நெய்வேலியிருந்து அனல் மின்சாரமும், கல்பாக்கத்திலிருந்து இவர்கள் சொல்லும் அணு உலை மின்சாரமும் வருகிறது. நெய்வேலியில் சுரங்கத்தில் இறங்கி உயிரைக் கொடுத்து பாடுபடும் தொழிலா ளர்களின் வேர்வையில் வரும் மின்சாரம் இவர்கள் வீட்டு விளக்கை எரிய வைக்கிறது. கல்பாக்கமும் அவ்வாறே. சில சமயம் அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது கல்பாக்கம், நெய்வேலி ஆலை பணியாளர்கள் உழைப்பை, தியாகத்தை கேட்கும் இவர்களால், அங்குள்ள மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் தொழிற்சாலை களிலிருந்து பெறப்படும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்ல முடியுமா? வெளியூர் மின்சாரத்தை நிறுத்தினால் இவர்கள் சும்மா இருப்பார்களா?

இவர்களுக்குத் தேவையான நெல்,கோதுமை போன்ற உணவுப் பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்களா? இல்லையே. வெளியூர் விளை பொருட்கள்தான்.  திருப்பூர் தொழிலாளர்களின் உழைப்புதானே இவர்கள் போட்டுக் கொள்ளும் உள்ளாடை மேலாடைகள். அனைத்தும் வெளியிலிருந்து வரும் பொருட்கள். ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறைதானே இன்றும் இருக்கிறது. பணம் என்பது இடையில் ஒரு கருவி அவ்வளவே.

வெள்ளிப் பனிமலை மீது உலவவும், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடவும் கனவு கண்ட மகாகவி சுப்ரமண்ய பாரதியின்

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
   ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்
   உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்!

-         மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

என்ற வரிகளை உண்மையாக்குவோம். கூடங்குளம் தொடங்குவோம். மின்பற்றாக் குறையைப் போக்குவோம்.


  


37 comments:

Sathiyanarayanan said...

கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆரம்பத்தில் எங்கே இருந்தார்கள்?

தமிழ்நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாமல் நீங்க எங்கே இருந்தீங்க ஐயா?
அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.

ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.

ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.

ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.

ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.

ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.

ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.

ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.

உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.

ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.

ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.

* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.

­* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.

தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17794 இருந்து எடுக்கப்பட்டது

Sathiyanarayanan said...

/* அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம். கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எந்த மின்சாரம் எங்கிருந்து வருகிறது? தமிழ்நாட்டில் இவர்கள் ஊருக்கு பல மைல்கள் தள்ளி உள்ள நெய்வேலியிருந்து அனல் மின்சாரமும், கல்பாக்கத்திலிருந்து இவர்கள் சொல்லும் அணு உலை மின்சாரமும் வருகிறது. */

கல்பாக்கத்திலிருந்து எவள்ளவு அலகு மின்சாரம் இந்த பகுதிக்கு வருகிறது?

Anonymous said...

sathiyanarayan you srilankan refugee shut your mouth and go away

Sathiyanarayanan said...

/* நெய்வேலியில் சுரங்கத்தில் இறங்கி உயிரைக் கொடுத்து பாடுபடும் தொழிலா ளர்களின் வேர்வையில் வரும் மின்சாரம் இவர்கள் வீட்டு விளக்கை எரிய வைக்கிறது. கல்பாக்கமும் அவ்வாறே. சில சமயம் அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது கல்பாக்கம், நெய்வேலி ஆலை பணியாளர்கள் உழைப்பை, தியாகத்தை கேட்கும் இவர்களால், அங்குள்ள மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் தொழிற்சாலை களிலிருந்து பெறப்படும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்ல முடியுமா? வெளியூர் மின்சாரத்தை நிறுத்தினால் இவர்கள் சும்மா இருப்பார்களா? */

இவர்களின் உழைப்பை இந்நாட்டில் எவரும் பயன்படுதுவதில்லையா? இவர்கள் அணுவுலையை தான் வேண்டாம் என்று சொல்கிறார்கள் புரிந்துக் கொள்ளுங்கள். என்ன இதே அணுவுலையை கர்நாடகமும், கேரளாவும் வேண்டாம் என்று சொன்னதே அவர்களுக்கு எங்கள் தமிழ் மக்கள் உழைப்பால் உருவாகும் மின்சாரம் மட்டும் தேவையா (தினமும் கர்நாடகவிற்கு 11க் கோடி அலகும், கேரளாவிற்கு 9க் கோடி அலகும், ஆந்திராவிற்கு 9க் கோடி அலகும் கொடுக்கப்படுகிறது தெரியுமா)?

Sathiyanarayanan said...

/* sathiyanarayan you srilankan refugee shut your mouth and go away */

பெயர் இல்லாதவரே பதில் தெரியவில்லை என்றல் வெளியிலேப்போ என்பாயா என்ன உன் பண்பாடு. பெயர் இல்லாதவரே எப்படிக் கண்டுபிடித்தீர்கள் நான் இலங்கை எதிலி என்று, நீங்க நிரம்ப அறியடையவரோ?

Sathiyanarayanan said...

/* ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்!

- மகாகவி சுப்ரமண்ய பாரதியார் */
எங்கும் பாரதி குறிப்பிடவில்லையே அணு ஆயுதம் செய்வோம் மக்களைக் கொல்வோம் என்று.

ELANGO T said...

வணக்கம்!சகோதரர் சத்திய நாராயணன்!
//Sathiyanarayanan said... December 18, 2011 2:26 PM ( Comment .1 )//

//கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆரம்பத்தில் எங்கே இருந்தார்கள்? //

இந்த வார்த்தைகளை மட்டும் வைத்து தங்களிடமிருந்து பல புள்ளி விவரங்கள். எனது கட்டுரையிலேயே மேற்படி வரிகளுக்கு அடுத்து நான் எழுதியுள்ள வார்த்தைகளே இதற்கு பதில். // போராட்டம் தொடங்கியது முதல் வேண்டாம் என்ற ஒரே கொள்கையிலேயெ நின்று இருந்தால் இவர்கள் உண்மையிலேயே போராடுகிறார்கள் என்று நம்பலாம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன், உள்ளூர் புள்ளிகள் ஊராட்சி பதவிகள் பெறுவதற்காக போராட்டத்தையே தள்ளி வைத்தனர். இப்போது எந்த நிபுணர் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் சொல்லும் ஆட்கள்தான் அறிக்கை தர வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட விவரங்களையும் கேட்க ஆரம்பித்துள்ளனர். எங்கோ இடிக்கிறது.// இது ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படும் சந்தேகம். சாதாரணமாகவே ஒரு சாலைப் பிரச்சினை என்றால் கூட தேர்தல் புறக்கணிப்பு செய்யும் காலம் இது. பதவிகள் மட்டும் எதற்கு?

//தமிழ்நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாமல் நீங்க எங்கே இருந்தீங்க ஐயா? //
என்று கேட்டு இருந்தீர்கள்.தமிழ் நாட்டில்தான் இருந்தேன். நான்கு தலை முறையாக காவிரிப் பிரச்சினை நடந்து வருவதும் தெரியும். தாங்கள் குறிப்பிடும் “கீற்று” இணைய இதழ் படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

//Sathiyanarayanan said... December 18, 2011 2:42 PM // comment.2
//கல்பாக்கத்திலிருந்து எவள்ளவு அலகு மின்சாரம் இந்த பகுதிக்கு வருகிறது//

அலகு போன்ற புள்ளி விவரங்களை விட பயன்படுத்தப் படும் மின்சாரம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி.

ELANGO T said...

வணக்கம்!
//Anonymous said... December 18, 2011 2:54 PM //
அனானிமஸ் அவர்களே, முடிந்தவரை அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிருங்கள்.கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

ELANGO T said...

வணக்கம் சகோதரர் சத்திய நாராயணன்!
//Sathiyanarayanan said... December 18, 2011 2:56 PM (Comment .3)//

//இவர்களின் உழைப்பை இந்நாட்டில் எவரும் பயன்படுதுவதில்லையா? இவர்கள் அணுவுலையை தான் வேண்டாம் என்று சொல்கிறார்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.//

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் ஒரு வழி காட்டுதலின் அடிப்படையில் திட்டமிட்டு குழுவாக. இயங்குகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவாளர்கள் பரவலாக குழுவாக இல்லாதபடியினால் வெளியில் தெரிவதில்லை.

Sathiyanarayanan said...

/* போராட்டம் தொடங்கியது முதல் வேண்டாம் என்ற ஒரே கொள்கையிலேயெ நின்று இருந்தால் இவர்கள் உண்மையிலேயே போராடுகிறார்கள் என்று நம்பலாம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன், உள்ளூர் புள்ளிகள் ஊராட்சி பதவிகள் பெறுவதற்காக போராட்டத்தையே தள்ளி வைத்தனர். இப்போது எந்த நிபுணர் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் சொல்லும் ஆட்கள்தான் அறிக்கை தர வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட விவரங்களையும் கேட்க ஆரம்பித்துள்ளனர். எங்கோ இடிக்கிறது. */சையும்

இத்திட்டத்தை இந்திய அரசு 10 ஆண்டு காலம் தள்ளிபோட்டதேன்? இதை மக்கள் போராட்டமாகப் பாருங்கள், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் போராட்டமாகப் பார்ப்பது ஏன். அணுவுலைப் பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன மக்களை பாதிக்காது என்பதா அல்லது தூய்மையானது என்பதா

சாதுகோடா (இந்தியாவின் யுரேனியம் வெட்டி எடுக்கப்படும் பகுதி) சுற்றிவுள்ள 40 கிராம மக்களின் நிலை என்ன, நீங்கள் சொன்ன நிபுணர்கள் சொன்னது என்ன இப்பொது செய்வது என்ன, வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை நிபுணர்கள் சொன்னது காப்பாற்றாமல் புறம் தள்ளுவது ஏன்?

ELANGO T said...

மீண்டும் வணக்கம்! சகோதரர் சத்திய நாராயணன்!
//Sathiyanarayanan said... December 18, 2011 3:15 PM ( Comment 4 )//

//எங்கும் பாரதி குறிப்பிடவில்லையே அணு ஆயுதம் செய்வோம் மக்களைக் கொல்வோம் என்று.//

ஒரு கவிஞர் என்ற முறையில் பாரதியாரின் இந்தியாவைப் பற்றிய கனவு அது. அவர் காலத்தில் இருந்ததை பாடியுள்ளார். ஒரு கவிஞர் சுருக்கமாக எதனை சொல்ல முடியுமோ அதனை சொல்லியுள்ளார். அது ஒரு மேற்கோள்.அவ்வளவே.
அதனை சொன்னேன். தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!.

Sathiyanarayanan said...

/* அலகு போன்ற புள்ளி விவரங்களை விட பயன்படுத்தப் படும் மின்சாரம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி. */

கல்பாக்கத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் மிக குறைந்த அளவே என்பதால் இந்த ஐயம்.

Sathiyanarayanan said...

கல்பாக்கத்தை சுற்றி உள்ள மக்கள் புற்றுநோயின்னால் இறப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது, தைராயுடுப் போன்ற பாதிப்பதும் அதிகரித்துள்ளது. நிபுணர்கள் சொன்ன எதையும் இங்கு பின்பற்றுவதில்லை, குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

Anonymous said...

சத்திய நாராயணா அவர்களே ஜீவி இதழில் ஒரு மாதம் முன்பு கல்ப்பாக்கம் அனுமின் நிலையம் தொடர்பாக மிக நீண்ட கட்டுரை வந்து இருந்தது. அதில் இதை போல புற்று நோய் வதந்திக்கு எல்லாம் சரியான விவரம் கொடுத்து இருந்தார்கள். என்னிடம் விகடன் கணக்கு இல்லை. யாராரிடமாவது இருந்தால் பதியுங்கள். அனு உலை வேண்டாம் என்பது உங்கள் கருத்து அதற்க்காக தவறான கருத்துகளை பதிக்க வேண்டாம்

கல்பாக்கத்தின் இரண்டு அனு உலை மூலம் அதிக மின்சாரம் கிடைப்பதில்லை. அது ரானுவத்திற்க்காக பயன்படுத்தபடும் உலை என அரசு ஏற்கனவே சொல்லி இருக்கிறது. மேலும் அங்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைவாக இருந்தாலும் அதை இது நாள் வரையில் உபயோகபடுத்தி கொண்டு தான் இருக்கிறோம்.

ஏன் அணையில் நீர் தேக்கி தயாரிக்க படும் புனல் மின்சாரம் கூட ஆபத்தானது தான். நீர் நிலைகளால் நில நடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. கேரளாவின் இடுக்கி அணை ஓர் உதாரணம். ஏன் முல்லை பெரியாறு கூட ஒரு உதாரணம் தான்.

அடுத்தது காறாலை மின்சாரதினால் காற்றின் போக்கி மாறி சீதோழ்ண நிலை கெடுகிறது என சொல்கிறார்கள். அதுவும் வேண்டாமே..

அப்புறம் அனல் மின்சாரம் .. ஓசோன் படலம் கெட்டு போக இதுவும் முக்கிய காரணம்

ஒன்று செய்யலாம். மின்சாரமே வேண்டாம். தீப்பந்தம் வெச்சுகுட்டு பகலில் ஆடு மாடு மேய்த்து பிழைக்கலாம்

Anonymous said...

சத்திய...ணா

கர்நாடகாவில் கைகா என்ற இடத்தில் ஒரு அனு உலை இருக்கிறதே. மேலும் பல உலைகள் கட்ட அங்கு கட்டுமாணம் நடக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து தற்போது மத்திய தொகுப்புக்கிற்க்கு செல்லும் ஒரே நிலையம் நெய்வேலி மட்டுமே அதுவும் மிக சிறிய அளவே மத்திய தொகுப்பிற்க்கு செல்கிறது. மத்திய தொகுப்பில் இருந்து கேரளா ஆந்திரா கர்நாடகாவிற்க்கு எத்தனை மின்சாரம் செல்கிறது என்பது லோட் அடிப்படை ஆனது. ஏன் ஆந்திர ராமகுண்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு மின்சாரம் வருகிறதே அது எப்படி, எந்தவித ஆதாரம் இல்லாமல் அடித்து விட கூடாது.

Anonymous said...

கூடங்குளம் 10 ஆண்டுகள் தாமதம் ஆனது சோவியத்தின் வீழ்ச்சியே காரணம் ஆகும். உள்ளூர் எந்த வித எதிர்ப்பும் இத்தனை வருடங்களாக இல்லை.

சாதுகோடாவில் யார் பாதிக்கபட்டார்கள்? ஆதாரம் என்ன? சரியான விவரம் கொடுக்கவும்.

நீங்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் கட்டுகதைகளையே தமிழ் சாயம் பூசி பேசுகிறீர்கள்.

அப்புறம் ஆதாரம் கொடுத்தாலும் ஏதாவது நடு நிலை ஆங்கில நாளிதழ் செய்தியாக கொடுக்கவும். பழக்க தோசத்தில் வைக்கோ அறிக்கை எல்லாம் ஆதரமாக கொடுக்க வேண்டாம்

Anonymous said...

அப்புறம் சத்திய நாரயணா ..கடைசியாக கர்நாடகா கைகா அனு மின் நிலைத்தில் இருந்து வரும் மின்சாரத்தை தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா என நாண்கு மாநிலங்களும் பகிரிந்து கொள்கிறது.

ஆதாரம் இங்கே : http://articles.timesofindia.indiatimes.com/2011-01-19/india/28371458_1_power-grid-nuclear-power-capacity-kgs-4

தமிழ்நாட்டில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் இந்த மின்சாரத்தை நீங்கள் உபயோகபடுத்தியே இருப்பீர்கள்.. இதுல நீங்க கேரளா கர்நாடகான்னு சந்து கேப்புல தமிழ் உரிமை போராட்டம் நடத்துறீங்க. :)

உதயகுமாரை வைத்து மக்களை தூண்டி விடுவது யார் என்பது சில நாட்களில் தெரிந்து விடும். அணைய போகும் விளக்கு அணையும் போது பிரகாசமாக எரிந்து விட்டு தான் அணையும். அதை போல தான் இந்த கூடங்குளம் என்ற அர்த்தம் இல்லா போராட்டம்.

Sathiyanarayanan said...

/* சத்திய நாராயணா அவர்களே ஜீவி இதழில் ஒரு மாதம் முன்பு கல்ப்பாக்கம் அனுமின் நிலையம் தொடர்பாக மிக நீண்ட கட்டுரை வந்து இருந்தது. அதில் இதை போல புற்று நோய் வதந்திக்கு எல்லாம் சரியான விவரம் கொடுத்து இருந்தார்கள். என்னிடம் விகடன் கணக்கு இல்லை. யாராரிடமாவது இருந்தால் பதியுங்கள். அனு உலை வேண்டாம் என்பது உங்கள் கருத்து அதற்க்காக தவறான கருத்துகளை பதிக்க வேண்டாம் */

http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp

http://www.tehelka.com/story_main47.asp?filename=Ne021010The_rules.asp

http://www.greenpeace.org/india/en/What-We-Do/Nuclear-Unsafe/Safety/Nuclear-accidents/Nuclear-accidents-in-India/Accidents-at-nuclear-power-plants/

ELANGO T said...

சகோதரர் சத்திய நாராயணன், வணக்கம்!

// Sathiyanarayanan said... Comments 5 & 6
December 18, 2011 5:19 PM / December 18, 2011 5:29 PM //

தங்களுக்கு இந்திய அரசின் மீது இருக்கும் ஏதோ ஒரு கோபத்தில் இப்படி சொல்கிறீர்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது. தங்கள் விவாதம் திசை மாறுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் தேவையில்லை என்பது போலவே, தேவைதான் என்பவர்களும் இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் இப்போதைய உடனடி தேவை மின்சாரம். அதற்கு கூடங்குளம் உதவும். வீண் புரளிகள் நாளடைவில் மறைந்து விடும்.

ELANGO T said...

வணக்கம்!
// Anonymous said... December 18, 2011 8:57 PM / December 18, 2011 9:08 PM /
December 18, 2011 9:12 PM / December 18, 2011 9:19 PM //
வருகை புரிந்த அனானிமஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! உங்கள் மூலம் நானும் சில தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

Sathiyanarayanan said...

http://www.sacw.net/article134.html

http://nuclear-news.net/2011/10/06/concern-over-indias-kalpakkam-nuclear-reprocessing-facility/

http://www.outlookindia.com/article.aspx?220865

Sathiyanarayanan said...

/* உதயகுமாரை வைத்து மக்களை தூண்டி விடுவது யார் என்பது சில நாட்களில் தெரிந்து விடும். அணைய போகும் விளக்கு அணையும் போது பிரகாசமாக எரிந்து விட்டு தான் அணையும். அதை போல தான் இந்த கூடங்குளம் என்ற அர்த்தம் இல்லா போராட்டம். */

யார் தூண்டுவது?

பெயரில்லாதவரே உங்களை யார் தூண்டி விடுவது?, அப்துல் கலாமை யார் தூண்டி விடுவது?

Sathiyanarayanan said...

/* சாதுகோடாவில் யார் பாதிக்கபட்டார்கள்? ஆதாரம் என்ன? சரியான விவரம் கொடுக்கவும். */


http://www.jca.apc.org/~hiroko/jadugoda/jadugoda.html

http://base.d-p-h.info/fr/fiches/dph/fiche-dph-8855.html

மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பு:
According to Ghanshyam Birouli, an anti-uranium mining activist based in Jaduguda, the symptoms of radiation are more prominent in the generation born after uranium mining started in Jaduguda. Ghanshyam’s own father, who was a labourer in the mines, died of lung cancer. The carelessness of UCIL in disposing the mining waste materials coupled with lack of knowledge about radiation among the tribals have exposed them to high levels of radiation.

http://intercontinentalcry.org/toxic-neglect/

http://www.wise-uranium.org/umopjdg.html

மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பு:
According to the survey, more children – about 9.5 per cent of the newborns – are dying each year due to extreme physical deformity, primary sterility is becoming common with 9.6 per cent of women not being able to conceive even three years after marriage. Cancer deaths in nearby villages are about 2.87 per cent and 68.33 per cent people are dying before the age of 62. (The Telegraph March 2, 2008)

http://www.scribd.com/doc/40396444/movement-against-jaduguda-uranium-mining

மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள்:

In the absence of any independent study, anecdotal evidence suggests that the mine workers in Jaduguda are suffering from an epidemic of lung cancer, skin diseases and other chronic ailments. Besides, nobody knows how many people have died so far.

The UCIL however claims that it has not noticed any effects of radiation on its workforce; notwithstanding the records of 17 workers who died in 1994, 14 in 1995, 19 in 1996and 21 in 1997.

The amount of Caesium-137 in tailing dam number 1 is 10 times higher than inother areas of Jaduguda. Caesium-137 is a radioactive isotope that’s formedmainly by nuclear fission and its presence at a uranium mine waste dump siteraises several disturbing points.

The air-gamma dose at the tailing dams exceeds 10mSv/y (1.1_Sv/h). Thisfigure, however is very high and dangerous.

http://rpd.oxfordjournals.org/content/early/2010/12/23/rpd.ncq496.abstract

மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பு:
it was estimated that the average radiation dose from all exposure pathways to the public living in villages around the mining complex is 2.5 mSv y−1 and around 50 % contributed due to inhalation of radon and its progeny. The external radiation dose due to terrestrial and cosmic activity is estimated to be 1.1 mSv y−1, which is 40 % of the total dose and ingestion dose contributes only 3% to the total dose.

Sathiyanarayanan said...

/* கூடங்குளம் 10 ஆண்டுகள் தாமதம் ஆனது சோவியத்தின் வீழ்ச்சியே காரணம் ஆகும். உள்ளூர் எந்த வித எதிர்ப்பும் இத்தனை வருடங்களாக இல்லை. */

சோவியத்தின் வீழ்ச்சி நடந்தது 1991ஆம் ஆண்டு, கூடங்குளம் மீண்டும் தொடங்கிய ஆண்டு 1997 என்பதை நினைவில் வையுங்கள். சோவியத்தின் வீழ்ச்சி ஒரு காரணியாக இருக்கலாம், அதுவே காரணியும் அல்ல அதுவே நிறுத்திவைப்புக்கு முதல் காரணமும் அல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

இருதயம் said...

A good one. You may also read my articles regarding koodankulam . Mr.Sathyanaaraayana , you are also welcome.

http://naanoruindian.blogspot.com/2011/12/blog-post_18.html

ELANGO T said...

//இருதயம் said... December 18, 2011 11:49 PM //

தங்களின் நான் ஒரு இந்தியன் பதிவிலுள்ள கட்டுரையைப் படித்தேன். தங்களது பதிவில் பார்க்கவும்.இங்கு எனது பதிவிற்கு வந்தமைக்கு நன்றி.

Anonymous said...

//சோவியத்தின் வீழ்ச்சி நடந்தது 1991ஆம் ஆண்டு, கூடங்குளம் மீண்டும் தொடங்கிய ஆண்டு 1997 என்பதை நினைவில் வையுங்கள். சோவியத்தின் வீழ்ச்சி ஒரு காரணியாக இருக்கலாம், அதுவே காரணியும் அல்ல அதுவே நிறுத்திவைப்புக்கு முதல் காரணமும் அல்ல என்பதை நினைவில் வையுங்கள்.//

கூடங்குளம் 1989ல் தொடங்க அடிக்கல் நாட்டபட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி காரணமாக சோவியத்தில் இருந்து தொழில்நுட்ப உதவி பெறுவது தடை பெற்றது. ரஷ்யா நாடு 91 முதல் 96 வரை ஸ்திரதன்மை இல்லாமல் மிகவும் சிரமபட்டது. 97ல் ரஷ்யா ஓர் நிலைக்கு வந்த பின்னரே மீண்டும் கூடங்குளம் திட்டம் தூசி தட்டி தொடங்கபட்டது. எதிரிப்பு காரணமாக காலதாமதம் ஆகவில்லை.

தற்போது வீண் புரளி காரணமாக போராட்டம் நடத்தும் கூடங்குளம் மக்கள் கட்டுமாண பணிக்கு ஏன் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்??

எத்தனை எத்தனை ஹோட்டல்கள் கூடங்குளத்தில்?? யாருக்காக அது ஆரம்பிக்கபட்டன?? எல்லாம் உள்ளூர் காரர்களால் தான் ஆரம்பிக்கபட்டன.

உள்ளூர்காரர்கள் மேலும் கட்டுமாணபணிக்கான காண்ட்ராக்ட் வேறு எடுத்து செய்தார்கள்.

முதலில் எதிர்ப்பு என்பதே இல்லை

Anonymous said...

அமெரிக்காரன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்க்கு அனு தடை நீக்கல் ஒப்பந்தம் வர மிகவும் உதவி செய்தான் ?? காரணம் அப்படியே அவன் நாட்டு நிறுவனங்களை வைத்து இந்தியாவில் அனு மின் நிலையங்கள் ஆரம்பித்து கல்லா கட்டலாம் எனபதே காரணம்..

அனு தொழில்நுட்ப தடை நீங்கியவுடன் இந்தியா என்னடான்னா அமேரிக்காவை கண்டுகொள்ளாமல் எதிரியான ரஷ்யாவிடம் தொழில்நுட்ப உதவி பெறுகிறது.

இதுவே அமெரிக்காவின் எரிச்சலுக்கு காரணம். உதயகுமார் அப்புறம் சில தொண்டு நிறுவனங்களை வைத்து இந்த போராட்டதை தூண்டுகிறது.

Anonymous said...

சென்னை மாநகரத்திற்க்கு மட்டும் 2500 மெகாவாட் மின்சாரம் ஒரு நாளைக்கு தேவைபடுகிறது.

மதுரை கோவை திருச்சி என மற்ற நகரங்களின் மொத்த தேவை 3000 மெகாவாட்.

விவசாயம் மேலும் சிறு தொழிகளிக்கான தேவை காலத்துக்கு தக்கவாறு மாறும்

இப்படியே எந்த திட்டமானாலும் போராட்டம் செய்து நாசமாக்க்கி விட்டால் பிரச்சனையே இல்லை.

தொழில் துறை எல்லாம் நாசமாகி கற்காலத்து போக வெகு நாள் எடுக்காது.

அனு மின்சாரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் .மின்சாரத்துக்கு என்ன செய்யலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

ஞானி என்பவர் கல்பாக்காத்தால் சென்னை அழிந்து விடும் என ரொம்ப வருடங்களாக சொல்லி வருகிறார்.

அவர் எதிர்ப்பு தெரிவிக்காத திட்டம் ஏதாவது பாக்கி இருக்கிறதா?

Anonymous said...

அணு உலை தொடர்பான சந்தேகங்களை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்​குனர் சேத்தல், சென்னை அணு மின் நிலையம் - பாவனி திட்டம் இயக்குனர் பிரபாத் குமார், சென்னை அணு மின் நிலையத்தின் இயக்குனர் ராமமூர்த்தி, அணு மின் நிலையத் தலைமை வடிமைப்​பாளர் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் கேட்டோம்.

''எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வரக்கூடிய 'நிலநடுக்கப் பகுதி - 3’ என்பதில் கல்பாக்கம் அணு உலை உள்ளது என்பது உண்மையா? ஒருவேளை பூகம்பம் ஏற்பட்டால், உலை சேதமாகி, கதிர் வீச்சு வெளியேறாதா?''



''நிலநடுக்கப் பகுதி 3-ல் கல்பாக்கம் உள்ளது என்பது உண்மை​தான். அணு உலையில் 30 சதவிகிதம் யுரேனியம், 70 சதவிகிதம் புளுட்டோனியம் கொண்டு வெப்பத்தை உருவாக்கித்தான் மின்சாரம் தயாரிக்கிறோம். பூகம்பம் ஏற்பட்டால் அணு உலை ஆட்டம் கண்டு, அதில் இருக்கும் திரவமோ வாயுவோ கசிந்து கதிர் வீச்சு பரவும் என்பதுதான் பலரது வாதம்.

ஆனால், அணு உலை இருக்கும் பகுதியில் நாங்கள் தொடர்ந்து செயற்கையாக, அதிகபட்ச ரிக்டர் அளவில் பூகம்ப அதிர்வுகளை ஏற்படுத்தி, அணு உலைக்குப் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். அவ்வளவு உறுதியான கட்ட​மைப்புகளுடன் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால், அணு உலை தானாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு பாதுகாப்பு நிலைக்குச் சென்றுவிடும். அதிர்வுகள் முழுமையாக அடங்கியதும், தானாக இயங்க ஆரம்பிக்கும். இதுவே ஆறு முதல் ஏழு ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால், அணு உலை தானாக இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். மீண்டும் நாங்கள்தான் அதனை இயக்க வேண்டும்.

Anonymous said...

இவ்வாறு அணு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது உலையைக் குளிர்விக்க குளிர்சாதன டீசல் என்ஜின் தானாகவே இயங்கும். டீசல் என்ஜின் ஒருவேளை செயல்படாமல் போனால், 'தெர்மோஸ்போனிங்’ எனப்படும் நீராவித் தொழில்நுட்பம் மூலம் உலை குளிர்விக்கப்படும். அதுவும் செயல்படவில்லை என்றால், அவசரக் காலத் துளைகள் மூலம், உலை மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதற்காக எப்போதும் 37.6 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மட்டும் அல்ல... சுனாமி வந்தாலும் அதையும் சமாளிக்கும் வகையில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணு உலை உட்பட மின் நிலையத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளும் சுனாமி அலைகளால் பாதிக்கப்படாத உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த மின் நிலையத்துக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அதன் பின்பு, 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் மின் நிலையத்தை ஆய்வு செய்து எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சான்று அளித்துள்ளது.

பூகம்பம், சுனாமி, சூறாவளி, புயல் என எந்த இடர்ப்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக இங்கு இருக்கும் மூன்று மைக்ரோ ஸ்டேஷன்களுக்கு முன்னதாகவே சிக்னல் கிடைத்துவிடும். இது தவிர, ஆன்லைன் நியூக்ளியர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மூலமாக, கம்ப்யூட்டரில் 24 மணி நேரமும் அதிகாரிகள் வானிலை மற்றும் பேரிடர்களைக் கண்காணிப்பார்கள்.''

Anonymous said...

'அணு உலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சுற்றுவட்டாரக் கிராம மக்களுக்கும் கதிர் வீச்சால் பாதிப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியுமா?''

''மனித உடலில் 250 மில்லி சீவர்ட் அளவுக்கு அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டால், விளைவு எதுவும் இருக்காது. 1,000 முதல் 3,000 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சு ஏற்பட்டால், குமட்டல், வாந்தி, நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு போன்றவை ஏற்படும். 4,500 முதல் 6,000 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் 30 நாட்களில் இறக்க நேரிடலாம்... என்பது உண்மைதான்.

அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம், அணு சக்தித் தொழில் முறை ஊழியர் ஓர் ஆண்டுக்கு 20 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சை உள்வாங்கலாம் என்று அனுமதித்துள்ளது. ஆனால், இங்கு உள்ள ஊழியர் ஓர் ஆண்டுக்கு 1.87 மில்லி சீவர்ட் மட்டுமே கதிர் வீச்சை உள்வாங்குகிறார். ஓர் ஊழியர் தொடர்ந்து 30 ஆண்டுகள் வேலை பார்த்தால்கூட பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் கதிர்வீச்சு இருக்காது. மின் நிலையத்தின் 1.6 கி.மீட்டர் சுற்றுவட்டாரத்தில் 2010-ம் ஆண்டு எடுத்த ஆய்வின்படி 0.023 மில்லி சீவர்ட் கதிர்வீச்சு மட்டுமே இருந்தது. இதனால், பொது மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில் தொலைக்காட்சி பார்க்கும்போதும் விமானப் பயணம் செய்யும்போதும் ஏற்படுகிற கதிர்வீச்சைவிட, இது குறைந்த அளவுதான்.



சென்னையைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ஆஸ்பயர் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 22 கிராமங்களில் கேன்சர் உட்பட 15 வகையான நோய்களுக்கான மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. 25,164 பேரில் 22,345 பேரிடம் ரத்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் 0.22 சதவிகிதம் நபர்களுக்கு (48 பேர்) கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இது கேன்சரின் தேசிய சதவிகிதமான 4 முதல் 12 சதவிகிதத்துக்கும் குறைவே. இப்படி அனைத்து நோய்களிலும் தேசிய சதவிகிதத்தைவிட இங்கு மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது.''

Anonymous said...

கடலில் இருந்து பம்பிங் செய்யப்பட்ட நீர், அணு உலை செயல்பாட்டுக்குப் பயன்படுத்திய பிறகு கடலில் விடப்படுகிறது. இதனால் கடல் நீர் வெப்பமாகிறது; மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மையா?''



''ஒரு மணி நேரத்துக்கு 90 மில்லியன் லிட்டர் தண்ணீர், அணு உலை செயல்பாட்டுக்குப் பின்பு கடலில் விடப்படுகிறது. இந்தத் தண்ணீர் அதிகபட்சம் 7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே சூடாக இருக்கும். ஆனால், கல்பாக்கத்தில் இதுவரை இது 5 டிகிரியைத் தாண்டியது இல்லை. இந்தத் தண்ணீரையும் நேரடியாகக் கடலில் கலக்கவிடுவது இல்லை. ஒன்பது கி.மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டி அதன் வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. இதனால், கடலின் தட்பவெப்பம் மாறுவதற்கு சாத்தியம் இல்லை. மீன் வளம் குறித்துக் கேட்டீர்கள், உலையின் நீர் வெளியேறும் இடத்திலேயே எவ்வளவு மீன்கள் நீந்துகின்றன என்பதை நேரடியாக நீங்களே பாருங்கள். இதனால், மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்பதும் பொய். (அழைத்துச் சென்று காட்டியபோது, ஏராளமான மீன்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன)

இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விஷயம். இங்கு சுமார் 1,000 பேர் வேலை பார்க்கிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பலர் வதந்தி பரப்புவதுபோல அணு மின் நிலையம் ஆபத்தானது என்றால், முதலில் பலியாகப்போவது நாங்கள்தான். ஆபத்து இருப்பது உண்மை என்றால், இங்கே வேலை பார்ப்போமா? நாட்டின் வளர்ச்சிக்கு யாரும் முட்டுக்கட்டை போட வேண்டாமே..!''

ELANGO T said...

Anonymous said... December 19, 2011 9:44 AM / December 19, 2011 9:47 AM December 19, 2011 9:53 AM / December 19, 2011 9:55 AM / December 19, 2011 10:04 AM / December 19, 2011 10:04 AM / December 19, 2011 10:04 AM/ December 19, 2011 10:05 AM/

//இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விஷயம். இங்கு சுமார் 1,000 பேர் வேலை பார்க்கிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பலர் வதந்தி பரப்புவதுபோல அணு மின் நிலையம் ஆபத்தானது என்றால், முதலில் பலியாகப்போவது நாங்கள்தான். ஆபத்து இருப்பது உண்மை என்றால், இங்கே வேலை பார்ப்போமா? நாட்டின் வளர்ச்சிக்கு யாரும் முட்டுக்கட்டை போட வேண்டாமே..!'' //

பெயர் அறிய முடியாத அனானிமஸ் நண்பருக்கு, எனது பதிவிற்கு வருகை தந்தமைக்கும் கருத்துரை தந்தமைக்கும் நன்றி. கடைசியில் சொன்ன மேற்படி வரிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றன.

Anonymous said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in


இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in

ELANGO T said...

//Anonymous said...December 23, 2011 3:25 PM//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Post a Comment