Wednesday, December 7, 2011

கேரளம் – சொந்த மாநிலத்தில் வேலை கேட்காமல் அணை உடைப்பு வேலை எதற்கு?


கேரளா என்றால் படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் என்று பெயர். ஆனால் அவர்களுக்கு சொந்த மாநிலமான கேரளத்தில் அவர்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் இல்லை. எனவே அண்டை மாநிலங்களில்தான் பெரும்பாலா னோர் பணி புரிகின்றனர். மத்திய அரசுப் பணிகளில் குறிப்பாக ரெயில்வே துறையில் தமிழ் நாட்டில் அதிகம் பேர் உள்ளனர் பாலக்காடு டிவிஷன் என்பதே தமிழ்நாட்டில் ரெயிவேயில் பணிபுரியும் கேரள மக்களின் வசதிக்காக தொடங்கப்பட்ட ஒன்று. இன்றும் தமிழ் நாட்டில் பல ரெயில்வே அதிகாரிகள் கேரளாக்காரர்கள்தான். திருச்சியில் பெல் ( BHEL ) நிறுவனம் தொடங்கியவுடன் அதிகமாக உள்ளே நுழைந்தவர்கள் இவர்கள்தான். கோவை நகரில் பல வியாபாரங்களை நடத்தி வருவதும் இவர்கள்தான். “ டீக்கடை நாயர் , பாலக்காடு அய்யர்போன்ற வார்த்தைகள்  தமிழ் நாட்டில் அவர்களது தனித் தன்மையைக் காட்டும்.

தமிழ் நாட்டிலிருந்து  பெரும்பாலும் இந்த கேரள மாநிலத்திற்கு விளை பொருட்கள், உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து இறைச்சிக்காக  லாரி லாரியாக கொண்டு செல்லப்படும் அடி மாடுகள் எனப்படும் பசு மாடுகளும் , எருமை மாடுகளும் கேரளாவுக்கே அதிகம். ஆற்று மணல் அதிகம் கடத்தப் படுவது இங்கிருந்து  கேரளாவுக்குத்தான். அது மட்டுமன்றி சென்னையில்தான்  இவர்களது மலையாள திரைப்படங்கள் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டன. அவர்களது திரைப்படத் துறை சென்னையில்தான் வளர்ச்சி பெற்றது.

இங்குள்ள தமிழர்கள் யாரும் அவர்களை அன்னியர்களாக பார்க்கவில்லை. தங்கள் உறவினர்களாகவே நினைத்தனர்.  தமிழக முதல்வராக எம்ஜிஆரையே ஏற்றுக் கொண்டவர்கள் இந்த தமிழ் மக்கள்.  இன்றும் பல இடங்களில், குறிப்பாக கிறிஸ்த , முஸ்லிம் மக்களிடையே தமிழ் மலையாளி கலப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. யாரும் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை.கேரளாவில் இருக்கும் அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழர்களால் வருமானமும் வியாபாரமும் அதிகம் கிடைக்கின்றன.அதே போல வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வரும் கேரள கிறிஸ்தவர்கள் அதிகம்.

எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலமான தமிழ் நாட்டையே அண்டி நிற்கும் கேரள மக்களுக்கு தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர மட்டும் மனது கிடையாது. பென்னி குயிக் என்ற ஆங்கிலேயர் கட்டிய அமைதியான, பலமான  முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கடப்பாரைகளோடு சென்று போராடுகிறார்கள். உடைக்க முயல்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர். கேரள அரசியல்வாதிகளே முதலில் அந்த இளைஞர்களுக்கு கைகளில் கடப்பாரையை கொடுப்பதை  விட உங்கள் மாநிலத்திலேயே வேலை வாய்ப்பை கொடுங்கள். தமிழ் நாட்டிலிருந்து வரும் எதனையும் வேண்டாம் என்று சொல்லுங்கள். தமிழ் நாட்டில் இருக்கும் கேரளக் காரர்களை உங்கள் மாநிலத்திற்கு திரும்பி வரச்  சொல்ல உங்களுக்கு தைரியம் உண்டா? அவர்களே அதனை விரும்ப மாட்டார்கள்.தமிழ் மக்களும் அந்த காரியத்தை செய்ய விரும்ப மாட்டார்கள்.ஏனெனில், இங்கு வாழும் பெரும்பாலான கேரளாக்காரர்கள் வாழும் முறையால் பேசும் மொழியால் தமிழராகி விட்டனர்.

அரசியல்வாதிகளே! இந்திய ஒற்றுமையை உங்கள் சுய நலத்திற்காக உடைத்து விடாதீர்கள்.

சிந்து நதியின்மிசை நிலவினிலே
     சேர நன்னாட்டிளம் பெண்க ளுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
     தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
     காவிரி வெற்றிலைக்கு மாறுகொள் வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
     சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்

என்ற பாரதியின் கனவை சிதைத்து விடாதீர்கள்!

6 comments:

Anonymous said...

inaverikonda veri naaigalidam pesuvadhdhu veen velai

தமிழ்மலர் said...

முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

ELANGO T said...

//Anonymous said... December 7, 2011 2:38 PM//

தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

Anonymous said...

முல்லை பெரியாறு பற்றிய யூ டியூப் வீடியொ பாருங்கள். அதில் கேரளாவின் அரசியல் அறியுங்கள். மககளின் பயம் கேரள ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது சுயநலத்திற்காக.
மெய்ப் பொருள் காண்பதறிவு.
நன்றி.விஜயன்

ELANGO T said...

//தமிழ்மலர் said..December 7, 2011 2:53 PM //
தமிழ் மலர் - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. ஒரு கேரள தமிழனின் எதார்த்த கோரிக்கை பற்றிய தங்களது பதிவினையும் படித்தேன்.முதலில் இரு மாநில மக்களுக்கும் இடையில் உள்ள கசப்புணர்வு தீர்ந்து முன்பு போல அமைதி திரும்ப வேண்டும். தாங்கள் கூறிய சுமுகமான தீர்வுகள் என்பது இரு மாநில பொறியியல் வல்லுநர்கள் பேசிப் பார்த்தால்தான் தெரிய வரும்.

ELANGO T said...

//Anonymous said...முல்லை பெரியாறு பற்றிய யூ டியூப் வீடியொ பாருங்கள். அதில் கேரளாவின் அரசியல் அறியுங்கள்......நன்றி.விஜயன்
December 7, 2011 9:40 PM //

தங்கள் வருகைக்கு நன்றி!முல்லைப் பெரியாறு பற்றிய You Tube காட்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட The Day After Tomorrow என்ற படத்தின் காட்சிகள் போன்று உள்ளது.எனது கட்டுரையின் நோக்கம் ஒற்றுமையாக வாழ வேண்டிய மக்கள் வேறுபட்டு நிற்கிறார்களே என்பதுதான்.இருபக்கமும் அரசியல் சித்து விளையாட்டுக்கள் மொழியின் பெயரால்,இனத்தின் பெயரால் நடை பெறுகின்றன.பாதிக்கப்படுவது வழக்கம் போல அப்பாவி மக்கள்தான்.

Post a Comment