Tuesday, November 29, 2011

சிந்தாமணியின் சிறப்பு


சிந்தாமணி என்றால் ஒளிவிட்டு பிரகாசிக்கும் ஒரு மணி ஆகும். ஆங்கிலத்தில் எமரால்ட் (EMERALD) எனப்படும் இது தமிழில் மரகதம் என்று அழைக்கப் படுகிறது. மரகத மணி, மரகதப் பச்சை என்று தமிழில் அடிக்கடி சொல்லப்படும். இதனைப் பற்றி விளக்க வந்த அபிதான சிந்தாமணி ஆசிரியர்,அது பாற்கடலில் பிறந்த ஒன்று என்றும், நினைத்ததைத் தரவல்லது என்றும், இந்திரனிடம் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். இவர் கூறுவது புராணக் கதை. பல ஜோதிடர்கள் மரகதப் பச்சை பற்றியும் மரகதக் கல் மோதிரத்தின் மகத்துவம் குறித்தும் அணிந்தால் வரக்கூடிய பலாபலன்கள் பற்றியும் உள்ளூர் அலை வரிசைகளில் படம் காட்டிக் கொண்டு இருப்பார்கள். பத்திரிகைகளிலும் மரகதமணி மோசடிகள் குறித்த செய்திகளை அடிக்கடி பார்க்கலாம்.

சிந்தாமணி பெயர் கொண்ட இலக்கியங்கள்:

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி, எட்டு பெண்களை மணந்து கடைசியில் துறவியாகிப் போன சீவகன் என்ற மன்னனின் கதையைச் சொல்வது. இயற்றியவர் ஒரு சமணத் துறவி அவர். பெயர் திருத்தக்க தேவர்.

இன்றைக்கும் ஏற்ற பல நல்ல கருத்துக்களை சொல்லும் நூல் விவேக சிந்தாமணி. எளிமையான நடையில் அமைந்த பாடல்களைக் கொண்டது. அதிலிருந்து ஒரு பாடல்...... ......

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே

இந்த நூலை எழுதியவர் நிர்க்குணயோகி என்பவர். அடிக்கடி பல பதிப்புகள் வந்த பழைய நூல்களில் இதுவும் ஒன்று. எனது தந்தை அவர் காலத்தில் பள்ளிப் படிப்பின்போது பாடமாக  படித்ததாகச் சொன்னார். விவேக சிந்தாமணி பெயரில் ஒரு பத்திரிகை வந்தது. அந்த பத்திரிக்கைக்கும்  இந்த நூலுக்கும் சம்பந்தம் இல்லை.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பான குணம் உண்டு. இது வாய்வு. இது பித்தம். இது சூடு. இது புளிப்பு,இனிப்பு,காரம் என்று சுவைக் குணங்களையும் சேர்த்துச் சொல்வார்கள். எதனையும் அள்வோடு சாப்பிட வேண்டும். அந்தந்த பொருட்களின் குணத்தினைச் சொல்வதுதான் பதார்த்த குணசிந்தாமணி என்ற நூலாகும். அகத்தியரின் சீடர்  தேரையர் எழுதிய செய்யுள் வடிவ நூல் ஆகும். இந்த நூலை முழுமையாகவும் தழுவியும் சிலர் இதே பெயரில்  வியாபார நோக்கில் வெளியிட்டுள்ளனர்.

சிந்தாமணி நிகண்டு என்பது செய்யுள் வடிவில் அமைந்த அகராதி நூல் ஆகும். இதனை எழுதியவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித் துறை ச.வைத்தியலிங்கம் பிள்ளை என்பவர்.

அபிதான சிந்தாமணி என்ற நூல் அந்த காலத்து தமிழ் இலக்கிய கலைக் களஞ்சியம் (ENCYCLOPAEDIA) ஆகும். ஏதேனும் விளக்கம் வேண்டும் என்றால் நூலகம் சென்று இந்த புத்தகத்தில்தான் தேடுவார்கள்.இந்த நூலை எழுதி வெளியிட தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் ஆ.சிங்காரவேலு முதலியார். நூல் வெளிவர உதவியவர் பாண்டித்துரை தேவர். நூலகங்களில் மட்டுமே காணக்கூடிய இந்த நூல் இப்போது புத்தகக் கடைகளில் கிடைக்கிறது.

சிந்தாமணி பெயரில் சினிமாக்கள் :

சிந்தாமணி என்று ஒரு படம். 1937 - இல் தியாகராஜ பாகவதர் நடித்து வெளிவந்த படம். பல ஊர்களில் ஆண்டுக் கணக்காக ஓடிய வெற்றிப் படம் மதுரையில் இருந்த ஒரு தியேட்டருக்கு சிந்தாமணி என்று பெயர்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்று மற்றொரு படம். எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி முதன் முதலில் கதாநாயகியாக  நடித்த படம்.


மக்களின் பெயர்கள், இடப் பெயர்கள்
 பெரும்பாலும் பெண்களின் பெயராகவே இது வைக்கபபடுகிறது. திருச்சி, மதுரை,கோவை போன்ற பெரிய ஊர்களில் சில இடங்களின் அடையாளப் பெயர்களாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் சிந்தாமணிப்பட்டி என்பதாகும். கோவை மற்றும் திருச்சியில் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டுகள் பெயர் பெற்றவை.

No comments:

Post a Comment